கோமுகி அணை ஆக்கிரமிப்புகள்... அகற்றப்படுமா? துார் வார விவசாயிகள் கோரிக்கை

கச்சிராயபாளையம்: கோமுகி அணையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி துார் வாரிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

கச்சிராயபாளையம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். இங்கு நெல், கரும்பு, வாழை, மரவள்ளி, மஞ்சள் உட்பட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்கின்றனர். இப்பகுதிகளில் சம்பா, ஆணி கார், மாசி கார் என மூன்று போகங்களில் நெல் சாகுபடி செய்யப் படுகிறது. இப்பகுதி விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக கல்வராயன்மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள கோமுகி அணை உள்ளது.

1963ம் ஆண்டு அப்போதைய முதல்வர் காமராஜர் ஆட்சியில் கோமுகி அணை கட்டும் பணிகள் துவங்கி, 1965ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி பயன்பாட்டிற்கு வந்தது. 13 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட அணையின் கொள்ளவு 46 அடியாக உள்ளது. இதில் 3.6 சதுர கி.மீ., நீர் பிடிப்பு பகுதியாக உள்ளது.

கல்வராயன்மலைப் பகுதியில் 290 சதுர கி.மீ., பரப்பளவில் பெய்யும் மழை நீர் மற்றும் பொட்டியம், கல்படை, பரங்கிநத்தம் ஆகிய ஆறுகளின் வழியாக கோமுகி அணையில் சேகரமாகிறது.

கோமுகி ஆற்றில் உள்ள வடக்கனந்தல் முதல் வேளாக்குறிச்சி வரை உள்ள 12 தடுப்பணைகளின் மூலம் 43 ஏரிகள் நீர் ஆதாரம் பெறுகின்றன. கோமுகி அணையின் பழைய மற்றும் புதிய பாசனத்தின் மூலம் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரத்து 860 ஏக்கர் விளை நிலங்கள் நேரடி பாசன வசதி பெறுகின்றன. மேலும், இக்கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் கோமுகி அணை உள்ளது. அணையிலிருந்து ஆண்டு தோறும் அக்டோபர் 1ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை 150 நாட்கள் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.

இதன் மூலம் கச்சிராயபாளையம் சுற்றியுள்ள பகுதிகளில் சம்பா பட்டத்தின்போது 6 மாத பயிரான பொன்னி நெல் சாகுபடி அதிகளவில் நடை பெற்றது.

கடந்த சில ஆண்டுகளாக போக்கு காட்டும் பருவ மழையால் அணை நிரம்புவதில் தாமதம் ஏற்பட்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் தண்ணீர் திறக்கப்படுகிறது.

அணையிலிருந்து 60 முதல் 70 நாட்கள் வரை மட்டுமே தண்ணீர் திறக்கப்படுவதால் இப்பகுதியில் நீண்ட நாள் பயிரான பொன்னி நெல் சாகுபடியை தவிர்த்து தற்போது 90 நாட்களில் விளையும் குறுவை நெல் ரககங்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

கோமுகி அணை நீண்ட நாட்களாக துார் வாரப் படாததால் அணை முழுவதும் மண் மேடாக மாறியுள்ளது. மேலும் தனி நபர்கள் பல ஏக்கர் பரப்பளவு இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். பொது பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது.

நீர் நிலைகளை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் கோமுகி அணையின் ஆக்கிரமிப்புகளை அகற்ற இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தொடர் ஆக்கிரமிப்புகளால் அணையின் நீர் பிடிப்பு பகுதிகள் நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது. இதனால் தண்ணீர் சேமிப்பதில் சிக்கல் ஏற்படுவதுடன் குறைந்த அளவு மழைக்கே அணை நிரம்பிவிடுகிறது. இதனால் அணையின் முழு கொள்ளவு தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் அணைக்கு வரும் நீர் முழுவதும் கோமுகி ஆறு வழியாக உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.

அரசு அனுமதியுடன் கோமுகி அணையிலிருந்து விவசாயிகள் வண்டல் மண் எடுத்து வருகின்றனர். அதனை முறையாக எடுக்காமல் அங்கும் இங்குமாக சில இடங்களில் ஆழமாக பள்ளம் தோண்டி மண் அள்ளுகின்றனர். இதனால் எந்த பயனும் ஏற்படவில்லை.

கோமுகி அணையின் ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக துார்வாரி பராமரிப்பு செய்தால் தண்ணீர் வீணாவதை தடுப்பதுடன் இப்பகுதியில் 2 போகம் சாகுபடிக்கு தண்ணீர் வழங்க முடியும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, விவசாயிகளின் நலன் கருதி, கோமுகி அணையின் ஆக்கிரமிப்புகளை அகற்றி துார் வாரிட மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுபணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement