இலவச மனைப்பட்டா பேச்சுவார்த்தையால் நடக்க இருந்த காத்திருப்பு போராட்டம் ரத்து

ராசிபுரம் :'தொப்பப்பட்டி பகுதி மக்களுக்கு, 45 நாட்களுக்குள் இலவச வீட்டுமனை பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும்' என, தாசில்தார் உறுதியளித்ததையடுத்து, அறிவிக்கப்பட்ட காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.
நாமகிரிப்பேட்டை ஒன்றியம், தொப்பப்பட்டி பகுதியில் வசித்து வரும் வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கடந்த, ஐந்தாண்டுகளாக பொதுமக்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், 'தொப்பப்பட்டி மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்கக்கோரி, வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன் தொடர் காத்திருக்கும் போராட்டம் நடத்தப்படும்' என, நாமகிரிப்பேட்டையில் நடந்த அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின், 8வது ஒன்றிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, போராட்டம் தொடங்குவதற்கு முன், ராசிபுரம் தாசில்தார் மகேஸ்வரி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில், மா.கம்யூ., கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன், சங்க மாவட்ட செயலாளர் சபாபதி, ஒன்றியக்குழு தலைவர் செல்வராஜ் மற்றும் பொதுமக்கள், பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அதில், தாசில்தார் மகேஸ்வரி, 'தொப்பப்பட்டி பகுதி ஏழை மக்களுக்கு இன்னும், 45 நாட்களுக்குள் இலவச வீட்டு மனை பட்டா வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு முழுமையாக ஏற்பாடு செய்யப்படும்' என உறுதியளிக்கப்பட்டது.
இதையேற்ற பொதுமக்கள், காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement