பன்றி காய்ச்சல்: மாவட்டத்தில் பண்ணைகளில் ஆய்வு
கம்பம், ஆக. 27
வட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் பரவி வருவதால் தேனி மாவட்டத்தில் உள்ள பன்றி பண்ணைகளில் கால்நடை பராமரிப்பு துறையின் நோய் தடுப்பு புலனாய்வு பிரிவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
நோய்வாய்ப்பட்ட பன்றிகளுடன் தொடர்பில் இருப்பவர்கள், பன்றி பண்ணையில் வேலை செய்பவர்களுக்கு பன்றி காய்ச்சல் பரவுகிறது. பாதிக்கப்பட்ட நபரின் இருமல் உள்ளிட்டவற்றின் மூலம் பிறருக்கு இந்த காய்ச்சல் பரவுகிறது. அசாம் உள்ளிட்ட சில வட மாநிலங்களில் பன்றி காய்ச்சல் பரவுவதால், தமிழகத்தில் கால்நடை பராமரிப்பு துறையினர் ‘உஷார்’ படுத்தப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் கம்பம், புதுப்பட்டி, அணைப்பட்டி, கூடலூர், லோயர்கேம்ப் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் பன்றி பண்ணைகளில் மாவட்ட கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் பாஸ்கரன், கால்நடை டாக்டர் செல்வம் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து பன்றிகளின் சாணம், எச்சில், சிறுநீர், ரத்த மாதிரிகளை சேகரித்து சென்றனர்.
குழுவினர் கூறுகையில், ‘பயப்படும் படி எதுவும் இல்லை. தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதால் பன்றிகளுக்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை. பன்றிகள் பராமரிப்பு பற்றி பண்ணையில் வேலை செய்பவர்களுக்கு எடுத்துரைத்துள்ளோம். எடுக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதிக்க உள்ளோம் என்றனர்.