பைக்கில் பறக்கலாமா? பஸ்சில் தொங்கலாமா?

பல்லடம்: மாணவர்கள் ஹெல்மெட் இன்றி பைக்கில் செல்வதும், பஸ் படிக்கட்டில் தொங்கிச் செல்வதும் கவலையளிப்பதாக, பல்லடத்தில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

பல்லடம் அரசு பெண்கள் பள்ளி மாணவியர் சார்பில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை ஜெயந்தி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியை புஷ்பலதா வரவேற்றார். மாவட்ட தொடக்கல்வி அலுவலர் சித்ரா, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பிரபாகரன், பாரதி அறக்கட்டளை நிர்வாகி சாகுல் அமீது முன்னிலை வகித்தனர்.

முன்னாள் மாவட்ட என்.எஸ்.எஸ்., தொடர்பு அலுவலர் முருகேசன் பேசியதாவது:

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்களே ஏற்படுத்த வேண்டும். ஆனால், மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் இருவர், மூவர் என ஹெல்மெட் இன்றி செல்வதும், பஸ் படிக்கட்டில் தொங்கிச் செல்வதும் கவலையளிக்கிறது. 18 வயது நிறைவடையும் முன், டிரைவிங் லைசென்ஸ் இன்றி வாகனம் ஓட்டக்கூடாது என்பதில் மாணவர்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

நாம் கவனமாக வாகனம் ஓட்டினாலும், பிற வாகன ஓட்டிகளின் செயல்பாட்டை கணிக்க முடியாது. மாணவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் மற்றவர்களுக்கு முன் மாதிரியாகவும், விழிப்புணர்வாகவும் அமைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, மாணவியர் ஹெல்மெட் அணிந்து, சாலை பாதுகாப்புவிழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாகச் சென்றனர். மங்கலம் ரோடு, என்.ஜி.ஆர்., ரோடு, கடைவீதி வழியாக ஊர்வலம்நடைபெற்றது.

Advertisement