புதுவை தமிழ்ச் சங்கத்திற்கு இன்று தேர்தல்

புதுச்சேரி: புதுவை தமிழ்ச் சங்க நிர்வாகிகள் தேர்தல் இன்று நடக்கிறது.

புதுவை தமிழ்ச் சங்கத்தில் 1,189‌ உறுப்பினர்கள் உள்ளனர். இந்த சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. 11 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். காலை 8:00 மணிக்கு தொடங்கும் ஓட்டுப் பதிவு மாலை 5:00 மணி வரை நடக்கிறது.

வரிசை எண் 1 முதல் 600 வரை உள்ள உறுப்பினர்கள் தமிழ்ச்சங்க முன் பக்க அரங்கிலும், 601 முதல் 1189 வரை வரிசை எண் உள்ளவர்கள் பின்பக்கம் உள்ள குறல் அரங்கத்திலும் ஓட்டுப் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு உறுப்பினர் 11  ஓட்டுகள் பதிவிட வேண்டும். 11க்கு குறைவாகவோ கூடுதலாகவோ பதியப்படும் ஓட்டுகள் செல்லாதவையாக கருதப்படும். ஓட்டுப் பதிவு முடிந்தவுடன் 11 வேட்பாளர்கள் இணைந்து தலைவர், துணைத் தலைவர் செயலர், பொருளாளர், துணைச் செயலர் மற்றும் ஐந்து ஆட்சி குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்தத் தேர்தலில் கலைமாமணி முத்து தலைமையில் செயல்பாட்டு அணியினர் 11 பேர் வேட்பாளர்களாக களம் இறங்குகின்றனர். தற்போதைய தலைவர் முத்து அணியில் செயலர் சீனு மோகன்தாசு, பொறியாளர் பாலசுப்ரமணியன், துணைத் தலைவர் திருநாவுக்கரசு உள்ளிட்டோரும் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் ஆணையர் பிரபாகரன் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

Advertisement