உலக தமிழரின் பொதுச்சொத்து; எக்காலத்திலும் அதன் உண்மை மாறாது! பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே பேச்சு
சென்னை: பவள விழா நிகழ்ச்சி யில், 'தினமலர் நாளிதழின் பயணம்; சுருக்கமான கண்ணோட்டம்' என்ற தலைப்பில், பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே பேசியதாவது:
தமிழ் பத்திரிகையான, 'தினமலர்' நாளிதழ் உதயமானது, இன்றைய கேரளத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில். எதற்காக... அங்கே ஒரு ஆட்சி நடந்தது; அது, தமிழர்களை வதைத்தது.
திருவிதாங்கூர் சமஸ்தானம் என்று சொல்லப்பட்ட அந்த நிலப்பரப்பில் வாழ்ந்த பல லட்சம் தமிழர்கள் தாங்க முடியாத கொடுமைகளுக்கு ஆளாகினர். சென்னையில் இருந்து பிரசுரமான எந்த தமிழ் அல்லது ஆங்கில நாளிதழும் அது குறித்து செய்தி வெளியிடவில்லை.
அப்போது தான், டி.வி.ராமசுப்பையர் என்கிற சுதந்திர போராளி, நாகர்கோவிலில் புறப்பட்டு திருவனந்தபுரம் சென்று, 'தினமலர்' என்கிற தமிழர் குரலை தொடங்கினார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ஓங்கி ஒலிப்பதற்காக தொடங்கப்பட்ட, இந்தியாவின் முதலாவது நாளிதழ், 'தினமலர்!' அரசாங்கத்தின் அடக்குமுறை எப்படி இருக்கும் என்பதை, இன்றைய தலைமுறைக்கு சொல்ல தேவையில்லை.
இப்போது காண்பதை காட்டிலும் முரட்டுத்தனமான நடவடிக்கைகள், 'தினமலர்' மீது பாய்ந்தன. அது வெளிவராமல் தடுப்பதற்கு, சட்டத்தின் அத்தனை கரங்களும் பிரயோகிக்கப்பட்டன.
எதற்கும் அசரவில்லை, 'தினமலர்!' கையில், 'தினமலர்' நாளிதழ் வைத்திருந்தாலே கைது செய்வர் என்பதை தெரிந்தும், 'தினமலர்' வாங்கி பனை மரத்தின் மீது ஏறி படித்தனர், பல்லாயிரம் தமிழர்கள். தமிழ் மக்களின் அத்தகைய ஆதரவு இருக்கும் போது, 'தினமலர்' ஏன் அரசோடு சமரசம் செய்யப் போகிறது?
மகத்தான மக்கள் போராட்டத்தை ஒடுக்க முடியாமல், குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் சேர்க்க சம்மதித்தது, திருவிதாங்கூர் சமஸ்தானம். கன்னியாகுமரி என்கிற இந்தியாவின் தென்கோடி நிலப்பரப்பு, தாய் தமிழகத்துடன் இணைந்தது இப்படித்தான்.
வந்த வேலை முடிந்தது; அடுத்த வேலையை பார்ப்போம் என தமிழகம் திரும்பியது, 'தினமலர்!' சென்னைக்கு போகுமாறு நலம் விரும்பிகள் வலியுறுத்தினர். இதையடுத்து தமிழகத்தில், 'தினமலர்' நாளிதழின் முதல் பதிப்பு நெல்லையில் ஜனித்தது.
ஏனைய பத்திரிகைகள் பார்லிமென்டையும், சட்ட சபையையும் மக்களிடம் கொண்டு சேர்க்க பாடுபடுகின்றன; நாம் தொலைதுார, குரலற்ற மக்களின் எதிர்பார்ப்புகளை பார்லிமென்டிற்கும், சட்டசபைக்கும் கொண்டு சேர்ப்போம் என்று தீர்மானித்தது, நம் 'தினமலர்' நாளிதழ்.
இந்திய நாளிதழ் வரலாற்றில், இன்றளவும் பிரமிப்புடன் விவாதிக்கப்படும் அத்தியாயம் அது.
பெரிய பத்திரிகைகள் நான்கு மாவட்டத்துக்கு, ஒரு நிருபர் வீதம் நியமித்துக் கொண்டிருந்த வேளையில், ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் பகுதி நேர நிருபரை நியமனம் செய்தது, 'தினமலர்!' அவர்கள் பெரும்பாலும் பள்ளி ஆசிரியர்கள்.
ஊருக்கு செல்ல சாலை இல்லை; சாலை இருந்தால் பஸ் இல்லை; பிள்ளைகள் எப்படி பள்ளிக்கு செல்வது; பள்ளி இருந்தால் ஆசிரியர் இல்லை; ஆசிரியர் இருந்தால் கழிப்பறை இல்லை; மாணவர்கள் எங்கே போவது?
இந்த ரீதியில் பாலம் இல்லை, தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, தொழில் இல்லை, வேலை இல்லை, விவசாயம் இல்லை, மயானம் இல்லை என்று, எல்லா இல்லைகளையும் எல்லையே இல்லாமல் மீண்டும் மீண் டும் செய்தியாக்கி, ஆட்சியா ளர்களுக்கு அழுத்தம் கொடுத்து, மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய துாண்டுதலாக நின்றது 'தினமலர்' நாளிதழ் மட்டுமே.
'தினமலர்' பிரதானமாக கையில் எடுத்த கொள்கையாக அனைவருக்கும் கல்வி, அடுத்தது குடிநீர், போக்கு வரத்து, தொழில், விவசாயம், மின்சாரம். இவை அனைத்தும் ஒருங்கிணைந்த சமூக பொருளாதார கட்டமைப்பை, தமிழகத்தில் நிர்மாணிக்க தன்னையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டது.
அத்தகைய உன்னதமான குறிக்கோளை அடைய, 'தினமலர்' நாளிதழ் மேற் கொண்ட லட்சிய பயணத்தில் தடங்கல்கள், எதிர்ப்புகள் ஏராளம். ஆனால், எத்தனை நெருக்கடி வந்தாலும் அது பாதை மாறவில்லை.
சொல்லப் போனால், தினமலரை ஏதாவது ஒரு காலகட்டத்தில் எதிர்க்காத, கண்டிக்காத தமிழர்கள் யாரும் இல்லை. அத்தனையும் தற்காலிக ஊடல்களாக முடிந்தன என்பது வரலாறு.
ஏனெனில், 'தினமலர்' என்றென்றும் உண்மையின் உரைகல். அதை விமர்சிக்கலாம். அது உங்கள் உரிமை. ஆனால், அதன் துாய்மையான செயல்பாட்டை நீங்கள் சந்தேகிக்க முடியாது; தினமலர் நாளிதழை விட்டு விலகவும் முடியாது.
ஏனெனில், 'தினமலர்' உலகத் தமிழர்களின் பொதுச்சொத்து; எந்தக் காலத்திலும் இந்த உண்மை மாறாது.
இவ்வாறு அவர் பேசினார்.