தகராறில் மாமனாரை வெட்டிவிட்டு தப்பியோடிய மருமகனுக்கு 'வலை'

துாத்துக்குடி:முத்தையாபுரத்தில், மாமனார் முனியசாமி, 48, என்பவரை அரிவாளால் வெட்டிய அவரது மருமகன் முருகன், 25, உள்ளிட்ட மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.

துாத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்தவர் முனியசாமி. ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி ராமலட்சுமி. தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மதுரையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகன் என்பவர், முனியசாமி மகளை திருமணம் செய்து, இரண்டு குழந்தைகள் உள்ளனர். முருகன் அடிக்கடி மதுபோதையில் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் முனியசாமி, மகள் மற்றும் பேரக்குழந்தைகளை ஒன்றரை மாதம் முன், முத்தையாபுரம் அழைத்து சென்றார்.

இதில் ஆத்திரமடைந்த முருகன், நேற்று நள்ளிரவு, 1:00 மணிக்கு முனியசாமி வீட்டிற்கு நண்பர்களுடன் வந்து, வெளியே படுத்திருந்த முனியசாமியை பீர் பாட்டிலால் தாக்கி, அரிவாளால் கொடூரமாக வெட்டி விட்டு தப்பினார்.
அக்கம் பக்கத்தினர் முனியசாமியை மீட்டு, துாத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் முனியசாமி சேர்க்கப்பட்டார். முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு, முருகன் உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர்.

Advertisement