காரியாபட்டி தீயணைப்பு நிலையத்திற்கு நிரந்தர கட்டடம் கட்ட எதிர்பார்ப்பு

காரியாபட்டி, செப். 2-

காரியாபட்டியில் தீயணைப்பு நிலையத்திற்கு நவீன வசதிகளுடன் கூடிய நிரந்தர கட்டடம் கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

காரியாபட்டி சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் அவசர தேவைகளுக்காக விபத்து மற்றும் தீ விபத்து காலங்களில் மீட்பு நடவடிக்கைக்காக தீயணைப்பு நிலையம் கொண்டுவரப்பட்டது. தற்போது வாடகை கட்டடத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் பணியாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த, மீட்பு கருவிகளை முறையாக பராமரிக்க போதிய இட வசதி கிடையாது. 24 மணி நேரமும் அவசரப் பணியில் ஈடுபடும் தீயணைப்பு வீரர்களுக்கு தேவையான ஓய்வு அறை, பயிற்சி மைதானம் எதுவும் கிடையாது. இதற்கு நிரந்தர கட்டட.ம் கட்ட வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்த பின் பிச்சம்பட்டி பகுதியில் தேவையான இடம் தேர்வு செய்யப்பட்டு, ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை நிதி ஒதுக்காமல் கிடப்பில் போட்டனர்.

தீ விபத்துக்கள், பருவமழை காலம் மீட்பு பணிகளை செய்ய சிரமம் உள்ளது. எனவே அப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு நவீன வசதிகளுடன் கூடிய நிரந்தர கட்டடம் கட்ட தேவையான நிதி ஒதுக்க அரசு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement