வேளாண் இயந்திரங்கள், கருவிகள் விண்ணப்பிக்க அழைப்பு
விழுப்புரம்: வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாங்க விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு;
விழுப்புரம் மாவட்டத்திற்கு அனைத்து வகை வேளாண் இயந்திரம், கருவிகளுக்கு என மொத்தம் 401 இயந்திரங்களுக்கு 502.33 லட்சங்களுக்கு இலக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு அதிகபட்சம் 50 சதவீதம் மானியம் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட மானிய தொகை இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு நடைமுறையில் உள்ள 50 சதவீத மானியத்துடன் கூடுதலாக 20 சதவீத மானியம் மாநில நிதியில் இருந்து சேர்த்து மொத்தம் 70 சதவீத மானியம் வழங்கப்படும்.
இதர விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 40 சதவீத மானியம் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட மானிய தொகை இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினைச் சாராத இதர பிரிவினை சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு விசை களையெடுப்பான், நெல் நாற்று நடவு செய்யும் இயந்திரம் மற்றும் தட்டை வெட்டும் கருவி ஆகியவற்றை வாங்க நடைமுறையில் உள்ள, 50 சதவீத மானியத்துடன் கூடுதலாக 10 சதவீத மானியம் மாநில நிதியில் இருந்து சேர்த்து மொத்தம் 60 சதவீத மானியம் வழங்கப்படும்.
தமிழக ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவுத்தளத்தில் பதிவு செய்த விவசாயிகள் மட்டும் ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி முதல் 7ம் தேதி வரை அல்லது 15ம் தேதி முதல் 21-ம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். விவசாயிகள் உழவன் செயலியில் தேவையான ஆணவங்களை, கொண்டு ஒரு முறை நிரந்தர பதிவு செய்ய வேண்டும்.
மேலும், விழுப்புரம் வருவாய் கோட்ட விவசாயிகள் வழுதரெட்டி பெரியார் தெருவில் உள்ள வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04146 294888, 04146 258951 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இதேபோன்று, திண்டிவனம் வருவாய் கோட்ட விவசாயிகள் மானுார் மரக்காணம் ரோடு உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04147 294486 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.