ஈரானுக்கு உதவி செய்த 27 விமான நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை

டெஹ்ரான்: ஈரானுக்கு ஆதரவளித்ததாகக் கூறி, 27 ஈரான் விமான நிறுவனங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய சேவை நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

ஈரானின் மகான் எயர் விமான நிறுவனம் மற்றும் அந்த நாட்டின் புரட்சிகர பாதுகாப்புப் படைக்கு ஆயுதங்கள், வீரர்களைக் கொண்டு செல்லுதல் போன்ற உதவிகளைச் செய்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதனால் மொத்தம் 27 ஈரான் நாட்டைச் சேர்ந்த விமான நிறுவனங்களும், அவற்றுடன் தொடர்புடைய சேவை நிறுவனங்கள் மீது அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, மலேசியா மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் அடங்கும்.

ஈரானின் விமானப் போக்குவரத்தை நிதி ரீதியாக பலவீனப்படுத்தவும், வான்வழி மற்றும் சரக்கு இணைப்புகளைத் துண்டிக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை துபாய், தோஹா மற்றும் இஸ்தான்புல்லில் இருந்து வரும் விமானப் போக்குவரத்தைப் பாதிக்கும். ஈரானை தனிமைப்படுத்தும் நடவடிக்கையாக ஈரானின் விமான போக்குவரத்து துறையின் பல நிறுவனங்கள் மீது ஏற்கனவே அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

இந்நிலையில், ஈரான் விமான நிறுவனத்துக்கு உதவி செய்ததாக குற்றம் சாட்டி, 27 விமான நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ளது. ஈரான் வான்பரப்பின் மேல் பிற நாட்டு விமானங்கள் பறப்பதற்கான அனுமதிகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஈரானுக்கு உதவி செய்யும் ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, மலேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்த எந்தவொரு வெளிநாட்டு நிறுவனமும் கடுமையான அமெரிக்க நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Advertisement