மாணவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கக்கூடாது; சுப்ரீம்கோர்ட் திட்டவட்டம்

17

புதுடில்லி: ''மாணவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கக்கூடாது'' என சுப்ரீம்கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. கல்லூரி மாணவருக்கு நோட்டீஸ் அனுப்பிய கிரெட்டர் நொய்டா நிர்வாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க போவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

'நீட்' வினாத்தாள் கசிவு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, டில்லி ஜன்தர் மந்தரில் கரப்பான்பூச்சி கட்சியினர் ஜூலை மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுதும் பரவிய இந்த போராட்டம் பல இடங்களில் வன்முறையாக மாறியது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாணவர்கள் மற்றும் குற்றப் பின்னணி இல்லாதோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட்டது. ஆனாலும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் கவுதம புத்தா பல்கலைக்கழக மாணவரும், இந்திய மாணவர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினருமான அக்ஷத் திரிபாதி, டில்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்றதற்காக கிரெட்டர் நொய்டா நிர்வாகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் இன்று (செப் 09) சுப்ரீம்கோர்ட்டில் மூத்த வழக்கறிஞர் பிஸ்வஜீத் பட்டாச்சார்யா, டில்லியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற மாணவருக்கு கிரெட்டர் நொய்டா நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியதாக தெரிவித்தார். இது, சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை அப்பட்டமாக மீறும் வகையில் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

செப்டம்பர் 4ம் தேதி வழங்கப்பட்ட நோட்டீஸ் திரும்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டதை தெரிவித்து எந்த அதிகாரப்பூர்வ உத்தரவும் வழங்கப்படவில்லை; அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்ட செய்தி ஊடகங்களில் மட்டுமே வெளியானது என வழக்கறிஞர் பிஸ்வஜீத் பட்டாச்சார்யா கூறினார்.

இதையடுத்து கல்லூரி மாணவருக்கு நொய்டா மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது குறித்து கிரேட்டர் நொய்டா அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்போவதாக சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.

மேலும் தலைமை நீதிபதி சூர்ய காந்த், ''இந்தப் போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்கள் மீது எந்தக் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று முந்தைய உத்தரவில் தெளிவாகக் கூறியுள்ளோம். மாணவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கக்கூடாது '', என்றார்.

Advertisement