மன ஆரோக்கியத்திற்கு மனிதர்களை உள்ளபடியே ஏற்க பழக வேண்டும் : கே.ஜி., மருத்துவமனை நிறுவன தலைவர் ஜி.பக்தவத்சலம் பேச்சு

சின்னாளபட்டி:''சிறந்த மன ஆரோக்கியத்திற்கு சூழ்நிலையையும், மனிதர்களையும் உள்ளபடியே ஏற்றுக்கொள்ள பழக வேண்டும்'' என கோவை கே.ஜி., மருத்துவமனை நிறுவன தலைவர் ஜி.பக்தவத்சலம் காந்திகிராம பல்கலை விழாவில் பேசினார்.

திண்டுக்கல் காந்திகிராம பல்கலையில் ஆராய்ச்சி மேம்பாட்டு பிரிவு, கல்வியியல் துறை சார்பில் ஆசிரியர்கள் தினம், பேராசிரியர்கள் கவுரவிப்பு, 2026ம் ஆண்டு சிறந்த ஆய்வாளர் விருது வழங்கல் என முப்பெரும் விழா நடந்தது. துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார். கல்வியியல் துறை தலைவர் பி.எஸ்.ஸ்ரீதேவி வரவேற்றார்.

கோவை கே.ஜி., மருத்துவமனை நிறுவன தலைவர் ஜி.பக்தவத்சலம் முதன்மை விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:

மனித வாழ்க்கையில் ஆரோக்கியமே மிக முக்கியமானது. தனி மனிதனையும் சமுதாயத்தையும் உயர்த்துவதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்' என்ற முன்னோர் வாக்கின் மூலம் உலகின் தலைசிறந்த தொழிலாக விவசாயத்தை கூறுகிறோம்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், விவேகானந்தர் ஆகியோருக்கெல்லாம் ஒரு ஆசிரியர் இருந்ததை போல, விவசாயிக்கும் ஆசிரியர் உண்டு. ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கும் பின்புலமாக ஒரு பெண் இருப்பதாக கூறுவர். சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு கல்வியும், ஆசிரியர்களின் பங்களிப்பும் முக்கியத்துவம் பெறுகிறது. சிறந்த மன ஆரோக்கியத்திற்கு சூழ்நிலைகளையும், மனிதர்களையும் உள்ளபடியே ஏற்றுக்கொள்ள பழக வேண்டும் என்றார்.

பல்கலை பதிவாளர் மாரிமுத்து, பேராசிரியர்கள் சுந்தரமாரி, மீனாட்சி உள்ளிட்டோர் பேசினர். விழாவில் கல்வியியல் துறை இணை பேராசிரியர் தேவகி எழுதிய 2 நுால்கள் வெளியிடப்பட்டன.

275க்கும் மேற்பட்ட சிறந்த பேராசிரியர்கள், 50க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பல்கலை பேராசிரியர்கள், கல்வியியல், ஆராய்ச்சி துறை மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement