'நடப்பது' எல்லாம் நன்மைக்கே...
'திருப்பூர்: 'இதய நோயால் பாதிக்கும் இளம் தலைமுறையினர், தொடர் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு திடீரென தள்ளப்படுவோர், உடல்நிலை குறித்து மிகுந்த கவனமுடன் இருக்க, விறுவிறு நடை குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும்,' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதய பாதிப்பு, பக்கவாதம், புற்றுநோய், நாள்பட்ட சுவாச பிரச்னை உள்ளிட்ட காரணங்களால், பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகமாகி வருகிறது. திடீரென பாதிப்புக்கு உள்ளாகிறவர்கள் வாழ்நாள் முழுதும் தொடர் சிகிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். காரணம், 15 - 25 வயதுக்கு உட்பட்ட இளம் தலைமுறையினரிடம் நடந்து செல்லுதல் எனும் பழக்கம் குறைந்து விட்டது. வீட்டுக்கு அருகே செல்ல வேண்டுமெனில் கூட சைக்கிள், பைக் தேடுகின்றனர்.
வளரிளம் பருவத்தில் நடந்து, உடல் சரிவர 'பிட்டாக' வேண்டும். இல்லையெனில், 35 வயதை தாண்டும் போதே, நீரிழிவு, இதய பாதிப்பு உள்ளிட்ட தொற்றா நோய் பாதிப்பு ஏற்பட்டுவிடுகிறது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இளம் தலைமுறையினரிடம் தொற்றா நோய்களை கட்டுப்படுத்தும் விதமாக 'விறு விறு நடையால் ஏற்படும் 20 நன்மைகள்' எனும் செயல்திட்டம் வகுத்து, விழிப்புணர்வு ஏற்படுத்த கடந்தாண்டு பொதுசுகாதாரத்துறை திட்டமிடப்பட்டது. போதிய, தொடர் விழிப்புணர்வு இல்லாததால், இத்திட்டம் கானல்நீராகி போயுள்ளது. பலரிடம் விறுவிறு நடைபழக்கம் குறித்து விழிப்புணர்வு முழுமையாக சென்றடையவில்லை.
ஆரோக்கியம்
உங்கள் கால்களில்...இதய மருத்துவ டாக்டர்கள் கூறியதாவது:
'விறுவிறு' நடை என்பது சாதாரண நடையை விட சற்று வேகமாகவும், உடற்பயிற்சி ஓட்டத்தை விட சற்று மெதுவாகவும் நடப்பதாகும். அனைத்து வயதினரும் எளிதாகச் செய்யக்கூடிய ஒரு சிறந்த உடற்பயிற்சி. பொதுவாக, ஒரு நிமிடத்திற்கு 100 - 120 எட்டுகளை (ஸ்டெப்ஸ்) வைப்பதாகும்.
இதயத் துடிப்பை சீராக்கி, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும். உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, நீரிழிவுநோய் வராமல் தடுக்கும். தினமும் 30 நிமிடம் விறு விறு வென நடப்பது தேவையற்ற கலோரிகளை எரித்து, ஆரோக்கியம் மேம்பட உதவும். மகிழ்ச்சியான ஹார்மோன்களைச் சுரக்கச் செய்து, மன அழுத்தம், பதற்றம் மற்றும் சோர்வை நீக்கும். விறுவிறு நடை பயிற்சி மூலம் கால்கள் மற்றும் இடுப்புப் பகுதி எலும்பு, தசைகள் வலுவடைவதால், வயதான பின்பும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்களிலும், பொதுமக்களிடம் பொது இடங்களிலும் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தி 'விறுவிறு நடையால் ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.