திருப்புவனம் திதி பொட்டல் அருகே தேங்கிய சாக்கடை கழிவால் அவதி
திருப்புவனம்:திருப்புவனம் திதி பொட்டல் அருகே வைகை ஆற்றில் சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் பக்தர்கள் பலரும் துர்நாற்றத்தால் முகம் சுழிக்கின்றனர்.
காசியை விட அதிகம் புண்ணியம் தரும் ஸ்தலம் திருப்புவனம். முன்னோர்களுக்கு திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் தர்ப்பணம் வழங்கி புஷ்பவனேஷ்வரரை வழிபட்டு செல்வார்கள். இதற்காக தினமும் நுாற்றுக்கணக்கானவர்கள் திருப்புவனம் வருவார்கள். ஆற்றில் நீர்வரத்தின்றி ஆற்றங்கரையை ஒட்டியுள்ள குளியல் தொட்டியில் நீராடி செல்கின்றனர்.
திதி பொட்டல் அருகே பிரமனூர் கால்வாய் கரை சேதத்தால், ரூ.2 கோடியில் புதிய தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடக்கிறது. திதி பொட்டல் எதிரே உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை பிரமனூர் கால்வாயில் திறந்து விடுகின்றனர். தடுப்புச்சுவர் கட்டுமான பணி நடப்பதால் நேரடியாக வைகை ஆற்றில் திருப்பி விட்டுள்ளனர். இதனால் திதி பொட்டல் அருகே சாக்கடை நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அக்., 10 ல் மகாளய பட்ச அமாவாசைக்காக தர்ப்பணம் கொடுக்க ஆயிரக்கணக்கில் வருவார்கள். எனவே பேரூராட்சி நிர்வாகத்தினர் தான் ஆற்றிற்குள் சாக்கடை கழிவு நீரை விடுகின்றனர். அவர்கள் சுத்தம் செய்யே வண்டும் என பொதுப்பணித்துறையினரும், ஆறு பொதுப்பணித்துறையின் கீழ் வருவதால் அவர்கள் தான் சுத்தம் செய்ய வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்தினர் பொறுப்பை தட்டிக்கழித்து வருகின்றனர்.