500 அரசு கட்டடங்களில் சோலார் மின் உற்பத்தி
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள 500 அரசு கட்டடங்களில் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடு முழுதும் அரசு கட்டடங்களில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல்கள் அமைக்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இதில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு தினசரி 500 மெகா வாட் மின்சாரம் தேவை. இவை மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்கிறது. இந்த மின்சாரத்தில் 27 மெகா வாட் மின்சாரம் சூரிய சக்தி மூலம் பெற அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, புதுச்சேரியில் உள்ள அரசு துறை அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகம், அரசு மருத்துவமனை, பள்ளிகள் என 500 அரசு கட்டடங்களின் மாடியில் சூரிய ஒளி மின் சக்தி தயாரிக்கும் சோலார் பேனல்கள் பொருத்தும் பணி துவங்கி உள்ளது.
இப்பணியை, 4 ஒப்பந்த நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.
தற்போது, புதுச்சேரி ரோமண்ட் ரோலண்ட் நுாலகம், ரெட்டியார்பாளையம் அரசு பள்ளி என சில இடங்களில் சோலார் பேனல்கள் அமைத்து 2 மெகா வாட் மின் உற்பத்தி துவங்கி இருப்பது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தனியார் கட்டங்களிலும் சேலார் பேனல் அமைத்து மின் உற்பத்தி செய்ய மானியம் அளிக்கப்படுவதாகவும், அதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள புதுப்பிக்கவல்ல எரிசக்தி முகமை கேட்டு கொண்டுள்ளது.