சீக்கிரம் துாங்கும் போட்டி; ஜெயித்தவருக்கு ரூ.12 லட்சம்
லண்டனில் நம்ம ஊர் ஆட்டோ; எல்லாம் மஹிந்திரா செய்த மாயம்
மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த், எக்ஸ் தளத்தில் வீடியோவுடன் வெளியிட்ட பதிவில், 'பிரிட்டனுக்கு ஆட்டோ ரிக்ஷா வந்து விட்டது. அது மஹிந்திரா தயாரிப்பு; நம்முடையது' என்று கூறியிருந்தார். இதைக்கண்ட வலைதளவாசிகள், ஜாலி கமென்ட்களை குவித்து விட்டனர். இந்தியாவை 200 ஆண்டு ஆட்சி செய்த பிரிட்டீஷ்காரர்கள், இப்போது தலைகீழ் காலனித்துவத்தை அனுபவிக்கப் போகின்றனர். இனி லண்டனில் மழை பெய்தால், 'அந்தப்பக்கம் போக முடியாது, டிராபிக் அதிகம்' என்று ஆட்டோ டிரைவர் சொல்லுவார் என்கிறார், வலைதளவாசி ஒருவர்.
சாவியுடன் தப்பிய பெண் போலீசாரிடம் சிக்கினார்
போராட்டக்காரர்களை கைது செய்து அழைத்துச்சென்ற டில்லி போலீஸ் பஸ் சாவியை பிடுங்கிக் கொண்டு தப்பியோடினார் பெண் ஒருவர். அவர் போலீசாரை மட்டம் தட்டி பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தபோது கண்டுபிடித்த போலீசார், கைது செய்தனர். 'போலீசாரால் என்னை துரத்திப்பிடிக்க முடியாது. நான் அவர்களை விட வேகமாக ஓடுவேன். பானை வயிறுடன் அவர்களால் எப்படி ஓட முடியும்' என்று ஜம்பமாக பேட்டி அளித்தபோது, பெண் போலீசார் அவரை பிடித்து இழுத்துச் சென்றனர். அந்த பெண், சினிமா இயக்குனர் அஸ்வினி சவுத்ரியின் மகள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மகள் செயலை நியாயப்படுத்திய தந்தை, 'புலிக்குப் பிறந்தது பூனையாகுமா' என்று பதிவிட்டுள்ளார்.
சீக்கிரம் துாங்கும் போட்டி; ஜெயித்தவருக்கு ரூ.12 லட்சம்
ஜப்பானில் மெத்தை கம்பெனி நடத்திய விசித்திரமான போட்டி, வலைதளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது. தங்கள் தயாரிப்பு மெத்தைகளில் படுத்து துாங்க வேண்டும் என்பது போட்டி. சீக்கிரம் துாங்க வேண்டும்; அதுவும் ஆழமான துாக்கமாக இருக்க வேண்டும் என்பது விதி. முதல் பரிசு ரூ.12 லட்சம். 'சும்மா துாங்குவது போல் நடிக்கலாமே' என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். அப்படியெல்லாம் ஏமாற்ற முடியாது; துாக்கத்தை கண்டுபிடிக்கும் கருவியை ஒவ்வொருவர் தலையிலும் மாட்டி விட்டனர்.
விளம்பரத்துக்காக இப்போட்டி நடத்தப்பட்டாலும், 'ஜப்பானியர்கள் துாக்கம் இன்றி அவதிப்படுகின்றனர். எனவே, நன்கு துாங்குவதன் அவசியத்தை வலியுறுத்தி இப்போட்டி நடத்தப்படுகிறது' என்கின்றனர் மெத்தை நிறுவனத்தினர். 'இது ஒரு ஜாலியான போட்டி' என்பது கலந்து கொண்டவர்களின் கருத்து. வெற்றி பெற்ற பெண் சுய்மி, 'இளவரசியின் மெத்தை போல எனக்கும் ஒன்று வேண்டும். அதற்காக இந்த பணத்தை பயன்படுத்துவேன்' என்றார்.
பசியை தாங்கும் மன உறுதி; சோதித்து பார்த்தவர் பெருமிதம்
ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஏதேனும் ஒரு சவாலை செய்து முடிக்கும் குணம் கொண்ட மும்பை நிறுவன அதிகாரி, அபிஷேக் அகர்வால், இந்தாண்டு பிறந்த நாள் முன்னிட்டு, 90 மணி நேரம் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார்.
பசியை தாங்கும் மன உறுதி தன்னிடம் இருக்கிறதா என்பதை அறிவது அவரது திட்டம். 'முதல் நாள் எளிதாக இருந்தது. இரண்டாம் நாளில், ஏன் நான் இதை செய்தேன் என்று தோன்றியது. மூன்றாம் நாள் முற்றிலும் அமைதியாக இருந்தேன். நான்காம் நாளில் என் பிறந்த நாள் வந்து விட்டது. பல மாதங்களில் முதல் முறையாக மனம் அமைதியை கண்டது' என்கிறார், அவர்.
'பசியை வென்றபோது, நான் வலிமையானவனாகவும், சக்தி வாய்ந்தவனாகவும், ஒரு சூப்பர் ஹீரோவை போலவும் உணர்ந்தேன். உங்கள் மூளையை ஒரு முறை தவறு என்று நிரூபித்து விட்டால், அதன் மற்ற வரம்புகளையும் நீங்கள் கேள்வி கேட்க தொடங்குவீர்கள். நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணம் உங்களுக்கு வந்துவிடும்' என்கிறார், அபிஷேக். அவர் வெளியிட்ட பதிவு, இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இந்திய ஆண்களின் கருணை; பாராட்டும் போர்ச்சுக்கல் பெண்
இந்தியாவுக்கு சுற்றுலா வந்த, 24 வயது போர்ச்சுக்கல் நாட்டு பெண் அனா, இந்திய ஆண்களை பாராட்டும் வீடியோ, டிரெண்டிங் ஆகியுள்ளது. 'இந்தியா வருவதற்கு முன், கொள்ளை, அச்சுறுத்தல், துன்புறுத்தல் நடக்கும் என்று பலரும் என்னை பயமுறுத்தினர். முதல் ஒரு மாதம் நானும் அச்சத்திலேயே வெளியில் எங்கும் செல்லவில்லை' என்கிறார், அவர்.
'நாட்கள் செல்லச்செல்ல உண்மை தெரிய ஆரம்பித்தது. கருணை மிக்க, ஜாலியான, உதவும் குணம் கொண்ட ஆண்களை நான் சந்தித்தேன். என் போன் பிரச்னையை அறிமுகம் இல்லாத இருவர், இரண்டு மணி நேரம் செலவிட்டு சரி செய்து கொடுத்தனர். என் எண்ணமே மாறி விட்டது. 100 சதவீதம் இந்தியா பாதுகாப்பானது என்று சொல்லவில்லை. நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அதே நேரம், இந்தியாவை அனுபவிப்பதற்கு அச்சம் ஒரு தடையாக இருக்க தேவையில்லை' என்று கூறியுள்ளார், அனா.