உணவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை :கடத்தப்பட்ட 5.64 லட்சம் கிலோ அரிசி மீட்பு
பெங்களூரு: கர்நாடகாவில் ஏழைகளுக்காக வழங்கப்படும், ரேஷன் அரிசியை கடத்தி வெளி மார்க்கெட்டில் விற்போர் மீதான நடவடிக்கையை, உணவுத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த மூன்று நாட்களில், பல்வேறு இடங்களில் கடத்தப்பட்ட 5.64 லட்சம் கிலோ அரிசியை, அதிகாரிகள் மீட்டனர்.
இதுகுறித்து, உணவுத்துறை அதிகாரிகள் அளித்த பேட்டி:
ஏழைகளுக்காக மாநில அரசு, அன்னபாக்யா திட்டத்தை செயல்படுத்தியது. பி.பி.எல்., ரேஷன்கார்டுதாரர்களுக்கு, நியாய விலைக்கடைகள் மூலமாக, இலவச அரிசி வழங்குகிறது. ஆனால், அரிசியை திருட்டுத்தனமாக கடத்தி சென்று, வெளி மாநிலங்களில் விற்கும் சம்பவங்கள், ஆங்காங்கே நடக்கின்றன. பயனாளிகளிடம் குறைந்த விலைக்கு, அரிசி வாங்கி அதை 'பாலீஷ்' செய்து, உயர் தரமான அரிசியாக்கி, அதிக விலைக்கு விற்கின்றனர்.
இதை கட்டுப்படுத்த, உணவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. திடீர் சோதனை நடத்தி, அரிசியை பறிமுதல் செய்கிறோம். கடந்த மூன்று நாட்களில், கர்நாடகாவின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி, 5,64,992 கிலோ அரிசி மீட்கப்பட்டது. அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட, 24 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மற்றும் வாகனங்களின் மதிப்பு, 4 கோடியே 75 லட்சத்து 93,033 ரூபாயாகும். அரிசி கடத்திய ஒன்பது பேர் மீது, வழக்கு பதிவாகியுள்ளது.
பெலகாவியில் இருந்து, மஹாராஷ்டிராவுக்கு கொண்டு செல்லப்பட்ட 71,800 கிலோ அரிசியும், மூன்று லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. ஓட்டுநர்கள் ரத்தன் பபன் சதானந்தா, விஜய் நாராயண் போஸ்லே, முகமது ரபீக் அத்தார் மீது, நிப்பானி ரூரல், மாளமாருதி போலீஸ் நிலையங்களில், வழக்கு பதிவாகியுள்ளது.
விஜயபுராவில் கடத்த முயற்சித்த, 35,392 கிலோ அரிசி மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. ஓட்டுநர் மீது வழக்கு பதிவாகியுள்ளது. அத்திப்பள்ளி செக்போஸ்ட் வழியாக, தமிழகத்துக்கு கடத்த முற்பட்ட 35,000 கிலோ ரேஷன் அரிசியை, பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக, நால்வர் மீது வழக்கு பதிவாகியுள்ளது. இதே போன்று, பல இடங்களில் சோதனை நடத்தி, அரிசி மீட்கப்பட்டது.
இவ்வாறு கூறினர்.
மேலும்
-
பல்கலை பேராசிரியரிடம் ரூ.2.50 லட்சம் ‘அபேஸ்’
-
நுாதன முறையில் நண்பரிடம் கார் மோசடி
-
‘நீட்’ அல்லாத இளநிலை படிப்புகளுக்கு 2ம் கட்ட மாப் -அப் சுற்றுக்கு விருப்பத்தேர்வு
-
இருளில் மூழ்கிய கடற்கரை சாலை சுற்றுலாப் பயணிகள் அவதி
-
பா.ஜ., மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்
-
மணிமுக்தாற்றில் கழிவுகள் கொட்டிய செப்டிக் டேங்க் வேன் பறிமுதல்