ஆம்னி பஸ்சில் ரூ.11 லட்சம் மதிப்பு 22 கிலோ கஞ்சா கடத்திய மூவர் கைது

ஓசூர்: பெங்களூருவிலிருந்து கேரளாவிற்கு, தமிழகம் வழியாக ஆம்னி பஸ்சில், 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 22 கிலோ கஞ்சா கடத்திய, ஆம்னி பஸ் டிரைவர்கள் உட்பட, மூவர் கைது செய்யப்பட்டனர்.

தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில், சிப்காட் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் போலீசார், நேற்று மாலை வாகன சோதனை செய்தனர். அப்போது கர்நாடகா மாநிலம், பெங்களூருவிலி ருந்து, கேரளாவிற்கு சென்ற, ‘கிரீஸ்’ என்ற தனியார் ஆம்னி பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர்.

லக்கேஜ் வைக்கும் பகுதியில், 12 பொட்டலங்களில், 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 22 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. அவற்றுக்கு யாரும் உரிமை கோரவில்லை. அதனால், பஸ் டிரைவர்களான சேலம் ஆட்டையாம்பட்டி அருகே, எஸ்.பாப்பாரப்பட்டியை சேர்ந்த ஹரிபாஸ்கர், 35, ஈரோடு மாவட்டம், பவானி மாயவரம் பகுதியை சேர்ந்த சரவணன், 36, மற்றும் கிளீனரான கோவை மாவட்டம், பொள்ளாச்சி அங்கலகுறிச்சியை சேர்ந்த தினேஷ்குமார், 26, ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

டிரைவரை விசாரணைக்கு அழைத்து சென்றதால், ‘கிரீஸ்’ பஸ் நிர்வாகத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். பெங்களூருவிலிருந்து ஓசூர் வந்த மேலாளர், அந்த பஸ்சில் பயணித்த, 36 பயணியருக்கு, பஸ் கட்டணத்தை திரும்ப வழங்கினார்.

சில பயணியர், தங்களுக்கு மாற்று ஆம்னி பஸ் சேவையை ஏற்படுத்தி தரக்கேட்டனர்.

அதன்பின், அவ்வழியாக வந்த ஆம்னி பஸ்களை நிறுத்தி பயணியரை ஏற்றி அனுப்பினர். கேரள மாநிலத்திற்கு ஹரிபாஸ்கர், சரவணன், தினேஷ்குமார் ஆகியோர் கஞ்சா கடத்தி செல்வது தெரிந்து, அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Advertisement