மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டி அதியமான் பாலிடெக்னிக் மாணவர்கள் பங்கேற்பு
ஓசூர்: தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் மாவட்ட எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாட்டு பிரிவு சார்பில், கிருஷ்ண
கிரியில் நேற்று முன்தினம் மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டி நடந்தது.
கல்லுாரி மாணவர்களிடையே எச்.ஐ.வி., குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், எச்.ஐ.வி., தொடர்பான பாகுபாட்டை குறைக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் நோக்கிலும், இந்த போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்ற, ஓசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரி முதலாமாண்டு மின்சார மற்றும் மின்னணுவியல் பொறியியல் துறை மாணவர்கள் நாகுல் பிரசாந்த், புகழேந்தி, வித்யா ஸ்வரூபன், சர்வேஸ்வரன் மற்றும் முதலாமாண்டு கணினி பொறியியல் துறை மாணவர் சந்தோஷ் ஆகியோர் பங்கேற்று பாராட்டு சான்றிதழ்களை பெற்றனர். போட்டியில் பங்கேற்ற மாணவர்களை, அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் பாலாஜி பிரகாஷ், மேலாளர் நாராயணன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.