சுகாதார ஆய்வாளர் காலியிடங்களை நிரப்பணும் :டெங்கு காய்ச்சல் தடுக்க

கோவை: தமிழகம் முழுவதும் 1,500க்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர் நிலை 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவர்கள் டெங்கு, மலேரியா, டைபாய்டு ஆகிய தொற்றுநோய்கள் பரவாமல் தடுப்பது, வீட்டுக்கு சென்று காய்ச்சல் பாதிப்பை ஆய்வு செய்து ரத்தமாதிரி சேகரிப்பது, கொசு ஒழிப்பு பணிகளை கண்காணிப்பது, தண்ணீரில் குளோரின் அளவை சரிபார்ப்பது இவர்களின் வேலை.

இப்பணியிடங்கள் காலியாக உள்ளதால், டெங்கு காய்ச்சலை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிரமம் நீடிக்கிறது.

கோவையில், 80க்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்காலிக பணியாளர்களை நியமித்து, அவர்களுக்கு பயிற்சி அளித்து, களப்பணிகளை செய்வதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. காலியிடங்களை நிரப்ப வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில்,' டெங்கு காய்ச்சல் மூன்று மாதங்களாக அதிகரித்துள்ளது. இதற்கு டெங்கு ஒழிப்பு பணிகளில் போதிய ஆட்கள் இல்லாததே காரணம். காலியிடங்களை நிரப்பாமல், அவ்வப்போது தேவைக்கு மட்டும் சில இடங்களில் தற்காலிக பணியாளர்கள் நியமிப்பதால், நிரந்தர தீர்வு கிடைக்காது; காய்ச்சலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது கஷ்டம்' என்றனர்.

Advertisement