அரும்பார்த்தபுரம் பைபாசில் வடிக்கால் வாய்க்கால் அமைப்பது யாருக்காக

புதுச்சேரி: அரும்பார்த்தபுரம் பைபாஸ் சாலையில் வீடுகளே இல்லாத சாலையோரம் ரூ.9 கோடியில் வடிகால் வாய்க்கால் அமைப்பது யாருக்காக என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

புதுச்சேரி – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், இந்திரா சிக்னலில் இருந்து அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலம் வரை ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக, நுாறடிச்சாலையில் இருந்து அரும்பார்த்தபரம் ரயில்வே மேம்பாலம் வரை நீண்ட இழுப்பறிக்கு பிறகு பைபாஸ் சாலை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், குடியிருப்புகளே இல்லாத இந்த பைபாஸ் சாலையில், உழந்தை ஏரிக்கரையில் இருந்து அரும்பார்த்தபுரம் ரயில்வே பாலம் வரை 3.5 கிலோ மீட்டர் துாரத்திற்கு, ரூ.9 கோடி செலவில் ‘ப’ வடிவ வடிகால் வாய்க்கால் கட்டும் பணி நடந்து வருகிறது. பைபாஸ் சாலையோரம் ஏற்கனவே இயற்கையாக அமைந்த பெரிய வாய்க்கால் உள்ள நிலையில், அந்த வாய்க்கால் ஒரமாக சிமென்ட் கான்கிரீட் ‘ப’ வடிவ வாய்க்கால் கட்டி வருவது வேதனை அளிக்கிறது.

புதுச்சேரியில் மக்கள் குடியிருக்கும் ஏராளமான நகர்களில் சரியான வடிகால் வாய்க்கால்கள், சாலை வசதிகள் இல்லை. ஆனால், யாருமே வசிக்காத இடத்தில் ரூ. 9 கோடிக்கு வாய்க்கால் கட்டுவது யாருக்காக, சாலையோரம் பிளாட் போட்டு விற்பனை செய்யும் ரியல் எஸ்டேட் அதிபர்களுக்காகவ என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இது குறித்து பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை அதிகாரிகள் கூறுகையில், சாலையோர பள்ளத்தில் மழைநீர் தேங்கினால் சாலையின் அடித்தளம் பழுதாகும். மேலும், அங்கு பிளாட் வைத்துள்ள உரிமையாளர்கள் பைபாஸ் சாலையால் தங்களின் பிளாட்டில் தண்ணீர் தேங்குவதாக புகார் அளித்தனர். அதனால் சாலையோரம் ‘ப’ வடிவ வாய்க்கால் கட்டப்படுகிறது. பணியை முதல்வர் ரங்கசாமி தான் துவக்கி வைத்தார் என கூறினர்.

புதுச்சேரி மக்களின் வரிப்பணத்தை பாழாக்கும் இதுபோன்ற செயல்களை கவர்னர் கைலாஷ்நாதன் வேடிக்கை பார்க்காமல், அதன் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement