ஒருதலைபட்சமாக போலீஸ் செயல்பாடு: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு

திருப்பூர்: 'போலீசாரின் செயல்பாடு ஒருதலைபட்சமாக இருக்கிறது' என ஹிந்து முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.

மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: திருப்பரங்குன்றத்தில் தீபத்துாணில் தீபம் ஏற்றலாம் என்ற ஐகோர்ட் உத்தரவை ஏற்று தீபம் ஏற்ற ஏற்பாடு செய்ய வலியுறுத்தி மாவட்டங்களில் ஹிந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் நான்கு இடங்களில் பேசிய பொறுப்பாளர்களை போலீசார் கைது செய்தனர்.

பிரதமர், முதல்வரின் சென்னை நிகழ்ச்சியை கருத்தில் கொண்டு கடந்த 4ம் தேதி சென்னையில் 19 இடங்களில் அறப்போராட்டம் நடத்தினோம். ஆனால், அவசரகதியில் வழக்கு பதிந்து நான்கு பேரை கைது செய்ததை கண்டிக்கிறோம்.

பாரத தேசத்தையும், ஹிந்து நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தி பேசியவர்கள் மீது புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் மீது நள்ளிரவில் வழக்கு பதிந்து அதிகாலையில் கைது செய்ததன் நோக்கம் என்ன? இது கடந்த தி.மு.க. ஆட்சி மீதான விசுவாசத்துடன் செயல்படும் அதிகாரிகளின் உள்ளடி வேலையா அல்லது உள்கட்சி சதியா என கேள்வி எழுகிறது.

எனவே ஒருதலைபட்சமாக கைது செய்யப்பட்ட பொறுப்பாளர்களை விடுதலை செய்து வழக்குகளை வாபஸ் பெற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement