வேலுாரில் போதை மாத்திரை விற்ற சென்னை வாலிபர்கள் கைது

வேலுார்: வேலுார் ஓட்டேரி அருகே, போதை மாத்திரை விற்ற சென்னை வாலிபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

வேலுார் மாவட்டம், பாகாயம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஓட்டேரி ஏரிக்கரை அருகே கன்னிக்கோவில் பகுதியில் போதை மாத்திரைகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாகக் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, எஸ்.ஐ., சவுந்தர்ராஜன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக டூவீலரில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர்.

அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், உடமைகளைச் சோதனையிட்டபோது, சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த 56 தபேண்டடால் போதை மாத்திரைகளும், ஐந்து சிரிஞ்சுகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், அவர்கள் சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்,29, மற்றும் தினேஷ்,23, என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் பயன்படுத்திய டூவீலரையும் பறிமுதல் செய்தனர்.

சம்பவம் நடந்த பகுதிக்கு அருகிலேயே அரசு கலைக் கல்லுாரி மற்றும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. எனவே, பள்ளி, கல்லுாரி மாணவர்களைக் குறிவைத்து இந்தப் போதை மாத்திரை கும்பல் செயல்படுகிறதா ? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement