கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி விற்க முடிவு: விலை உயர்வை சமாளிக்க திட்டம்

சென்னை: தமிழகத்தில் அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ, 50 ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்வது தொடர்பாக, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.

தமிழகத்தில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆகஸ்டில் கிலோ, 50 – 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட சன்னரக அரிசி விலை தற்போது, 70 – 80 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதேபோல், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன.

உணவு துறை அமைச்சர் வெங்கடரமணன் தலைமையில், விலை கண்காணிப்பு குழு ஆய்வு கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில், நேற்று முன்தினம் நடந்தது. தலைமை செயலர் சாய்குமார், உணவு துறை செயலர் அமுதா, நிதித் துறை செயலர் சித்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், அத்தியாவசிய பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இந்திய உணவு கழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சன்னரக அரிசி வாங்கி, கூட்டுறவு அங்காடிகளில் கிலோ, 40 – 50 ரூபாய்க்கு விற்பது தொடர்பாக, அரசு பரிசீலித்து வருகிறது. இதற்காக, எந்தெந்த மாநிலங்களில் அரிசி கிடைக்கும்; எவ்வளவு கிடைக்கும் என்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

அதில், 1 லட்சம் டன்னுக்கு அரிசி கிடைப்பது உறுதி செய்யும் பட்சத்தில், கூட்டுறவு அங்காடிகளில் குறைந்த விலைக்கு விற்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement