வாய்க்கால் பணியில் முறைகேடு விசாரணைக்கு பரிந்துரை

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சியில் வாய்க்கால் கட்டும் பணியில் முறைகேடு நடந்துள்ளதாக வந்த புகாரின் பேரில் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நெல்லிக்குப்பம் நகராட்சி மூலம் திருவள்ளுவர் நகரில் கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணி நடந்தது. இதுபற்றி திருவள்ளுவர் நகர் கிராம நிர்வாக சபை நிர்வாகிகள் தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய புகாரில் எங்கள் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி வீடுகள் மற்றும் சர்க்கரை ஆலை கழிவுநீர் செல்ல 2006 ம் ஆண்டு பெரிய வாய்க்கால் கட்டினர். ஆனால் வாய்க்காலின் அடியில் சிமெண்ட் பூசவில்லை. இதனால் கழிவுநீர் பூமியில் சென்று நிலத்தடி நீரை பாதித்தது. இதனால் மக்கள் பாதித்தனர். எனவே புதிய வாய்க்கால் கட்ட ஆலை நிர்வாகம் ரூ. 25 லட்சம் நிதி வழங்கியது.

நகராட்சி மூலம் ரூ.1.20 கோடியில் சில மாதங்களுக்கு முன் வாய்க்கால் கட்டினர். கடந்த முறை போல் இம்மறையும் வாய்க்கால் அடியில் சிமண்ட் பூசவில்லை. இதனால் கழிவுநீர் முறையாக செல்லவில்லை.

இதுகுறித்து நகராட்சி ஆணையரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதில் முறைகேடு நடந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனு மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு எஸ்.பி.விசாரனை செய்து புகார் அளித்தவர்களுக்கு பதில் கொடுத்துள்ளார். அதில் இந்த மனுவில் கூறியபடி முறைகேடு நடந்துள்ளதா என நகராட்சி நிர்வாக இயக்குனர் விசாரணை செய்து பதில் அளிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

இந்த மனு மீது என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என மக்களிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Advertisement