பெட்ரோல் ஏற்றுமதி வரி உயர்வு: 50 பைசாவிலிருந்து ரூ.2.50 ஆனது

புதுடில்லி: சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் சீரற்ற நிலைமைக்கு இடையே, லிட்டருக்கு 50 பைசாவாக இருந்த பெட்ரோல் மீதான ஏற்றுமதி வரியை, அடுத்த 2 வாரங்களுக்கு மத்திய அரசு 2.50 ரூபாயாக உயர்த்தியுள்ளது.

அதே வேளையில், டீசல் ஏற்றுமதி மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு 16 ரூபாயில் இருந்து 8.50 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இரு எரிபொருட்கள் மீதான சாலை மற்றும் உட்கட்டமைப்பு வரி பூஜ்ஜியமாக தொடர்கிறது.

விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரி மாற்றமின்றி லிட்டருக்கு 10.50 ரூபாயாக நீடிக்கிறது. இந்த புதிய வரி விகிதங்கள் அக்டோபர் 16 முதல் அமலுக்கு வருகின்றன.

மேற்காசிய பகுதியில் நிலவிய பதற்றமான சூழ்நிலைக்கு இடையே, உள்நாட்டில் போதுமான அளவுக்கு எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்யவும், ஏற்றுமதியை கட்டுப்படுத்தவும் கடந்த மார்ச் 27ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் மீது ஏற்றுமதி வரிகள் விதிக்கப்பட்டன.

சர்வதேச கச்சா எண்ணெய் விலையை கணக்கில் கொண்டு, இரு வாரங்களுக்கு ஒருமுறை இந்த வரிகளை அரசு சீராய்வு செய்து வருகிறது. உள்நாட்டு நுகர்வுக்கான பெட்ரோல், டீசல் கலால் வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Advertisement