அமெரிக்க அமைச்சர் மும்பை வருவது ஏன்?: வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

1

புதுடில்லி: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, அரசுமுறை பயணமாக இன்று நம் நாட்டிற்கு வருகிறார். இந்த பயணத்தின்போது, அவர் மஹாராஷ்டிராவின் மும்பை, குஜராத்தின் ஜாம்நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கிறார்.

வெளிநாட்டு தலைவர்கள், நம் நாட்டிற்கு வருகையில் தலைநகர் டில்லி வருவது வழக்கம். ஆனால், ரூபியோவின் பயண பட்டியலில் டில்லி இடம்பெறவில்லை. அதேசமயம், அக்., 20ல் மும்பையில், ரூபியோவுடன், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு நடத்த உள்ளதாக, அமெரிக்காவுக்கான இந்திய துாதர் செர்ஜியோ கோர் சமீபத்தில் கூறியிருந்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்,'ரூபியோ தன் ஊழியரை மும்பைக்கு வரவழைத்து உள்ளார். 'வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுக்கே என்ன நடக்கிறது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மோடி அவர்களுக்கு விளக்க வேண்டும்' என, விமர்சித்திருந்தார்.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் நேற்று அளித்த விளக்கம்: நம் நாட்டிற்கு வரும் வெளிநாட்டு தலைவர்களை, டில்லி தவிர பிற நகரங்களில் வரவேற்பது, கடந்த 10 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. குஜராத்தின் வதோதரா வந்த ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், ஆமதாபாத் வந்த ஜெர்மன் தலைவர் பிரெட்ரிக் மெர்சையும், உத்தர பிரதேசத்தின் வாரணாசியில், மொரீஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலத்தையும் பிரதமர் மோடி வரவேற்றுள்ளார். கோவா, கேவடியா, அமிர்தசரஸ் உள்ளிட்ட நகரங்களிலும் சர்வதேச சந்திப்புகள் நடந்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடன், நம் வெளியுறவு அமைச்சர் வரும் 20ல் சந்தித்து பேச உள்ளதையும் வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

Advertisement