இரவிலும் சூரிய ஒளியை வழங்கும் திட்டம்: இந்தியா - அமெரிக்கா நிறுவனங்கள் ஒப்பந்தம்

16

வாஷிங்டன்: இரவு நேரத்திலும் பூமியின் குறிப்பிட்ட பகுதிகளில் சூரிய ஒளியைப் பிரதிபலிக்க செய்யும் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த அமெரிக்காவின், 'ரிப்ளெக்ட் ஆர்பிட்டல்' நிறுவனம், இந்தியாவின், 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த, 'ரிப்ளெக்ட் ஆர்பிட்டல்' நிறுவனம், விண்வெளியில் பெரிய பிரதிபலிப்பு கண்ணாடிகளைக் கொண்ட செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தி, அவற்றின் மூலம் சூரிய ஒளியை பூமியின் குறிப்பிட்ட இடங்களுக்குத் திருப்பிவிடத் திட்டமிட்டுள்ளது.

'இதன் மூலம் பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளுக்கு இரவில் வெளிச்சம் வழங்கவும், சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் கூடுதல் நேரம் மின்சாரம் உற்பத்தி செய்யவும் முடியும்' என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டம் குறித்து அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: தேவையான இடங்களில் 5 கி.மீ., பரப்பளவுக்கு சூரிய ஒளியை செயற்கைக்கோள் மூலம் செலுத்த முடியும். அதன் பிரகாசத்தை கட்டுப்படுத்தவும், தேவையான நேரத்தில் நிறுத்தவும் முடியும். தொலைதூர தொழில் பகுதிகளில் பணிநேரத்தை நீட்டிக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும், பொது நிகழ்ச்சிகளுக்கும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும்.

இதற்காக தெலுங்கானாவின் ஹைதராபாதைச் சேர்ந்த, 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' நிறுவனத்தின், 'விக்ரம்' ராக்கெட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன. முதல் செயற்கைக்கோள், 'விக்ரம்- - 1' ராக்கெட் மூலமும், இரண்டாவது செயற்கைக்கோள் தற்போது உருவாக்கத்தில் உள்ள, 'விக்ரம்- 1யூ' ராக்கெட் மூலமும் ஏவப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன், 1993-ல் ரஷ்ய விஞ்ஞானிகள், 'ஸ்னாம்யா' என்ற திட்டத்தின் கீழ், 65 அடி நீளமுள்ள பிரதிபலிப்புக் கண்ணாடியை விண்வெளியில் நிலைநிறுத்தி, பூமியில் சூரிய ஒளியை பிரதிபலிக்கச் செய்தனர். சோதனை வெற்றிகரமாக நடந்தபோதும், நிதிப் பற்றாக்குறையால் அத்திட்டம் கைவிடப்பட்டது.

Advertisement