விழிப்புணர்வு ஊர்வலம் கவர்னர் துவக்கி வைப்பு
புதுச்சேரி: புதுச்சேரி காவல்துறை சார்பில் போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கவும், தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தவும் ‘போதைப்பொருட்களுக்கு எதிராக தேசத்திற்காகப் பயணம்’ என்ற பைக் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று துவங்கியது.
கடற்கரை சாலை, காந்தி சிலை அருகே நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, தற்காலிக சபாநாயகர் அன்பழகன், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இதில், விக்னேஷ் கண்ணன் எம்.எல்.ஏ.,தலைமைச் செயலர் சரத் சவுகான், டி.ஜி.பி., ஷாலினி சிங், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் உள்ளிட்ட போலீசார் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, புதுச்சேரி போலீஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, பள்ளிப் கல்வித்துறை சார்பாக ‘போதைப்பொருள் இல்லாத சமூகம்’ என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களின் ஓவியக் கண்காட்சி நடந்தது. போதை பழக்கத்திலிருந்து விடுபட்டு சுதந்திரமான நல்வாழ்வை வாழ்வதைக் குறிக்கும் வகையில், வானில் ஹீலியம் பலுான்கள் பறக்கவிடப்பட்டன.
கவர்னர் கைலாஷ்நாதன் தலைமையில் நடந்த ‘போதைப்பொருட்களுக்கு எதிராகப் போராடுவோம், விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்’ என்ற உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.ஊர்வலத்தில், 2 பெண் போலீஸ் உட்பட 5 பேர் அடங்கிய குழுவினர் பைக்கில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, தாமன் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் வழியாக பயணித்து, வரும் 28ம் தேதி குஜராத்தில் உள்ள ஏக்தா நகரை அடைகின்றனர்.
அங்கு, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு நடக்கும் தேசிய ஒருமைப்பாடு அணிவகுப்பில் பங்கேற்கின்றனர். இவர்களுடன் உதவி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 11 பேர் கொண்ட குழுவும் குஜராத் பயணிக்கிறது.
பொது மக்களுக்கும், மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 250 போலீசார், 200 கல்லுாரி மாணவர்கள் பைக்கில் கோரிமேடு எல்லை வரை ஊர்வலமாக சென்று ஆதரவு தெரிவித்தனர்.