புதுச்சேரி, நெல்லிக்குப்பம் பெண் இந்திய துாதரகத்தில் தஞ்சம்

புதுச்சேரி: சவுதி அரேபியாவில் நர்சாக பணியாற்றிய புதுச்சேரி பெண் துாதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

சவுதி அரேபியாவின் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹவுதி பயங்கரவாத அமைப்பு நடத்திய ஏவுகணை தாக்குதலில், 13 பேர் பலியாகினர்; 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் சவுதியின் பிரபலமான ஜெர்மன் மருத்துவமனை இயங்கி வருகிறது.

இந்த மருத்துவமனையில் புதுச்சேரி காராமணி குப்பம் ஜீவானந்தம் மேல்நிலைப் பள்ளி அருகில் வசிக்கும் முஸ்தபா என்பவரின் மகள் ஆயிஷா செவிலியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை சவுதி விமான நிலையத்தில் வெடிகுண்டு சம்பவம் நடக்கும் போது அதிகாலை 3 மணி வரை ஆயிஷா பதட்டத்துடன் தனது பெற்றோரிடம் பேசி உள்ளார்.

அதன் பிறகு அவரது தொடர்பு துண்டிப்பானது. அவரை தொடர்பு கொள்ள முடியாமல் ஆயிஷா குடும்பத்தினர் பதட்டம் அடைந்தனர். மேலும் ஆயிஷாவுடன் கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணும் பணியாற்றி வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் சவுதி அரேபியாவில் உள்ள இந்திய துாதரகத்தில் பாதுகாப்பாக, தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 3 மணி அளவில் துாதரகத்தில் இருந்து மீண்டும் ஆயிஷா தனது குடும்பத்தினரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசினார். மேலும் அவருடன் பணியாற்றிய நெல்லிக்குப்பம் பெண் உட்பட 62 பேர் இந்திய துாதரகத்தில் பாதுகாப்பாக உள்ளதாக தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதனால், புதுச்சேரியில் உள்ள அவரது குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

Advertisement