நர்ஸ் கொலை வழக்கில் வினோதம்: கொலையாளி இல்லை; உதவிய நண்பர்கள் சிறையில்

புதுச்சேரி: வில்லியனுார் அடுத்த கோபாலன் கடையை சேர்ந்த தனுஷ்கோடி மகள் ஜெயஸ்ரீ, 22; தனியார் மருத்துவமனை செவிலியர். இவர், அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் ரவுடி குமார் (எ) கலைக்குமார் என்பவரை காதலித்து வந்தார். கலைக்குமாரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்ததால், ஜெயஸ்ரீ காதலை கைவிட்டார். சிறையில் இருந்து ஜாமினில் வந்த கலைக்குமார் தனது கூட்டாளியின்உதவியுடன் பேசுவதற்கு ஜெயஸ்ரீயை கடந்த மாதம் 26ம் தேதி அழைத்து சென்றார். அப்போது, இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஜெயஸ்ரீ யை வெட்டி படுகொலை செய்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து கலைக்குமாரை தேடி வந்தனர். கடந்த 30ம் தேதி காட்பாடியில் ரயில்முன் பாய்ந்து ரவுடி கலைக்குமார் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த கொலை சம்பவத்தில் கலைக்குமாருக்கு உதவியதாக, பொறையூரை சேர்ந்த லோகேஷ்வரன் மற்றும் ஆகாஷ் ஆகியோரை உடனடியாக போலீசார் கைது செய்தனர்.

ஜெயஸ்ரீயை அழைத்து வந்த கோபாலன் கடையை சேர்ந்த சதிஷ்குமார், கொலை செய்த பிறகு கலைக்குமாருக்கு அடைக்கலம் கொடுத்து, காட்பாடிக்கு செல்ல உதவிய தவளக்குப்பத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் கிச்சா (எ) ஹரிகிருஷ்ணன், விழுப்புரம் கார்த்திக் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

காதல் விவகாரத்தில் பெண் கொலை செய்யப்பட்டவரும், கொலை செய்த ரவுடியும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ஆனால், நட்புக்காக கொலையாளிக்கு உதவிய அவரது கூட்டாளிகள் 5 பேர் தற்போது சிறையில் உள்ளனர்.

Advertisement