பர்கூர் மலைப்பாதையில் ஆம்புலன்சில் பிறந்த குழந்தை

அந்தியூர்:அந்தியூர் அடுத்த பர்கூர் மேற்கு மலையிலுள்ள, கொங்காடை பெரியவீதியை சேர்ந்த கெல்லைய தம்படி மனைவி ராஜேஸ்வரி, 28; நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு, நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, ஒசூர் '108' ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு சென்ற ஊழியர்கள், ராஜேஸ்வரியை ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு, வனப்பகுதி வழியாக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது, வழியிலேயே வலி அதிகமான நிலையில், அவசரகால மருத்துவ நுட்புநர் சந்திரசேகரன் பிரசவம் பார்த்தார். இதில், ராஜேஸ்வரிக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன்பின், தாயும், சேயும் பாதுகாப்பாக அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நலமுடன் உள்ளனர்.

Advertisement