ரூ.ஒரு லட்சம் கோடி இலக்கை நோக்கி திருப்பூர் பின்னலாடை தொழில்துறை

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவரும், கே.எம்.நிட்வேர் நிறுவனரும் கே.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது:

கடந்த மூன்று தசாப்தங்களில், திருப்பூர் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக உருவெடுத்துள்ளது. 1990ம் ஆண்டு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் நிறுவப்பட்டதிலிருந்து, இத்தொழில் மையம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது.

பின்னலாடை ஏற்றுமதி மதிப்பு 290 கோடி ரூபாயிலிருந்து, 2025-26ம் ஆண்டு 46 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. நிட்டிங், சாயமிடுதல், பதப்படுத்துதல், அச்சிடுதல், எம்பிராய்டரி, ஆடைத் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தொழில்துறைச் சூழலே இந்த மாற்றத்திற்கான முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

கவுரவ தலைவர் சக்திவேலின், சீரிய தலைமையில் நிறுவப்பட்ட திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், வளர்ச்சிப் பயணத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளது. அவரது தலைமையின் கீழ், ஏற்றுமதி சார்ந்த தொழில்துறை சூழலை வலுப்படுத்துதல், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், கொள்கை ஆதரவைப் பெறுதல் மற்றும் தொழில் வளர்ச்சிக்கான முக்கியத் தேவைகளை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் சங்கம் தீவிரமாகச் செயல்பட்டது.

திருப்பூர் உலகளவில் போட்டியிடக்கூடிய ஆடை உற்பத்தி மையமாக உருவெடுக்க முக்கியப் பங்களிப்பு கிடைத்தது. தற்போது சங்கத்தின் தலைவரான சுப்பிரமணியன் தலைமையில், போட்டித்தன்மையை வலுப்படுத்துதல், நிலையான வளர்ச்சியை ஊக்குவித்தல், தொழில்நுட்பப் பயன்பாட்டை மேம்படுத்துதல் மற்றும் சர்வதேசச் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பல்வேறு முயற்சிகளை சங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

சாதனையின் தொடர்ச்சியாக, வரும், 2030ம் ஆண்டிற்குள் ஒரு லட்சம் கோடி ரூபாய் என்ற மாபெரும் ஏற்றுமதி இலக்கை எட்டும் நோக்கில், வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்கள், தயாரிப்புப் பல்வகைப்படுத்துதல், தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் நிலையான உற்பத்தி முறைகள் ஆகியவற்றின் வாயிலாக திருப்பூர் தனது அடுத்தகட்ட வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை அமைத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement