இடும்பன் கோயில் நகைகள் திருட்டில் பெண் ஊழியர் உட்பட இருவர் கைது

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி இடும்பன் கோயிலில் 20.5 பவுன் தங்க நகைகள், ரூ.10 லட்சம் மதிப்பு வெள்ளிப் பொருட்கள் திருடுபோன வழக்கில் தற்காலிக பெண் ஊழியர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

பழநி சிவகிரிபட்டி பைபாஸ் ரோட்டில் ஹிந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இடும்பன் கோயில் உள்ளது. இக்கோயில் செயல் அலுவலர் விமலா பொறுப்புகளை ஒப்படைக் காமல் 2026 மார்ச் 27ல் பணியில் இருந்து சென்றார். பின்னர் ஏப்.,20ல் செயல் அலுவலராக நரசிம்மன் பொறுப்பு ஏற்றார்.

தொடர்ந்து அவர் நகைகளை ஆய்வு செய்தபோது விக்னேஸ்வரா வகையறா கோயிலுக்கு பாத்தியப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள மூன்று கிலோ வெள்ளிப் பொருட்கள், 20.5 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரிந்தது. 2026 மே 30ல் பழநி டவுன் போலீசில் நரசிம்மன் புகாரளித்தார். எஸ்.பி., ஜெயக்குமார் முன்னாள் செயல் அலுவலர் விமலா, இடும்பன் கோயிலில் பணியில் இருக்கும் ஊழியர்களிடம் விசாரித்தார்.டி.எஸ்.பி., தேவராஜ், இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். விசாரணையில் கோயில் அலுவலகத்தில் தற்காலிகமாக பணிபுரிந்த அதே பகுதி பாப்பம்பட்டி செந்தில்குமார் மகள் நிரஞ்சனா 25, அப்போதைய செயல் அலுவலர் விமலாவிற்கு தெரியாமல் பெட்டகத்தின் சாவியை எடுத்து நகையை திருடியது தெரிய வந்தது. திருடிய நகையை நிரஞ்சனா, தனது நண்பர் நெய்க்காரப்பட்டி பிரபாகரன் 34, மூலம் உருக்கி விற்றதை விசாரணையில் ஒப்புக்கொண்டார்.

பழநி டவுன் போலீசார் திருடி உருக்கப்பட்ட நகைகளை அவர்களிடம் இருந்து மீட்டு நிரஞ்சனா, பிரபாகரன் இருவரையும் கைது செய்தனர்.எஸ்.பி., ஜெயக்குமார் கூறுகையில், இச்சம்பவத்தில் கைதான இருவர் இதுதவிர வேறு யாரும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனரா என விசாரித்து வருகிறோம் என்றார்.

Advertisement