கூட்டுறவு மேலாண் நிலையத்தில் ஆசிரியர்களாக மாறிய முன்னாள் மாணவர்கள்

தேனி: கூட்டுறவு மேலாண் நிலையங்களில் டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் வகுப்பு எடுக்கும் நிலை எழுந்துள்ளதாக ஓய்வு பெற்ற கூட்டுறவுத்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.

கூட்டுறவுத்துறையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டுறவு பட்டயப்படிப்பு (டி.கோப்.,) படிக்க கல்வி நிலையம் செயல்படுகிறது. இந்த படிப்பு படித்தவர்கள் மட்டும் கூட்டுறவுத்துறையில் எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு செல்லும் நிலை உள்ளது.

இதனால் அங்கு அதிக மாணவர்கள் சேர்கிறார்கள். இந்த மையங்களில் ஒய்வு பெற்ற கூட்டுறவு சார்பதிவாளர்கள், சங்க செயலாளர்கள் கூட்டுறவு துறை தொடர்பான வகுப்புகள் எடுத்து வந்தனர். இந்நிலையில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் பணிக்கு வர வேண்டாம் என உத்தரவிடப் பட்டுள்ளது.

இதனால் கடந்த ஆண்டுகளில் இங்கு டி.கோப்., படித்த மாணவர்களே தற்போது படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்களாக மாறி வகுப்பு எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அனுபவத்தை இழக்கும் மாணவர்கள்: ஓய்வு பெற்ற கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கூறுகையில், ‘ஓய்வு பெற்றவர்கள் வகுப்பு எடுக்கும் போது அனுபவத்தையும், துறை சார்ந்த நுணுக்கங்களை கற்றுக்கொடுப்பார்கள்.

அவர்கள் இல்லாததால் அனுபவ கல்வியை இழக்கிறார்கள். கடந்தாண்டு படித்தவர்களே பாடம் எடுக்கும் போது மாணவர்கள் துறை சார்ந்த பகுதிகளை அறிந்து கொள்ள முடியாது.

ஓய்வு பெற்றவர்களை நீக்கினாலும் அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Advertisement