93,493 வாக்காளர்கள் தகுதியற்றவர்கள் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியலில், சரிபார்க்கும் சிறப்பு இயக்கத்தின், நேற்றைய நிலவரப்படி, 93 ஆயிரத்து 493 பேர், வாக்காளர் பட்டியலில் இடம் பெற தகுதியற்றவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ரவிபிரகாஷ் செய்திக்குறிப்பு:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு தீவிரத் திருத்தப் பணி 2026, கடந்த ஆண்டு அக்டோபர் 27ம் தேதி முதல் கடந்த பிப்ரவரி 14ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலுக்கு முந்தைய பட்டியலில், 10 லட்சத்து 21 ஆயிரத்து 578 வாக்காளர்கள் இருந்தனர். வரைவு வாக்காளர் பட்டியலில், 9 லட்சத்து 18 ஆயிரத்து 111 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, சிறப்பு தீவிரத் திருத்தம், 2026ன்போது, வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 467 வாக்காளர்களின் விவரங்களை மீண்டும் சரிபார்க்கும் சிறப்பு இயக்கம், புதுச்சேரியின் அனைத்துப் பிராந்தியங்களிலும் கடந்த 6ம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அக்டோபர் 15ம் தேதி நிலவரப்படி, 97 ஆயிரத்து 395 வாக்காளர்களின் விவரங்கள் (சுமார் 94) மீண்டும் சரி பார்க்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 6072 வாக்காளர்களின் விவரங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் வரும் 20ம் தேதிக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
தகுதியுள்ள எந்தவொரு வாக்காளரும் வாக்காளர் பட்டியலில் விடுபடக் கூடாது என்பதை உறுதிசெய்யும் நோக்கில், அடுத்த சிறப்பு முகாம் நாளை (17ம் தேதி) அனைத்து ஓட்டுச்சாவடியிலும் நடத்தப்படும்.
மீண்டும் சரிபார்க்கப்பட்ட 97 ஆயிரத்து 395 வாக்காளர்களில், நிரந்தரமாக இடம் பெயர்ந்தமை, இறப்பு, இருப்பிடத்தில் இல்லாமை, இரட்டை பதிவுகள், வெளிநாட்டு குடியுரிமை பெற்றமை மற்றும் இதர காரணங்களின் அடிப்படையில், 93 ஆயிரத்து 493 பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற தகுதியற்றவர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர்.
மொத்தம் 3,902 வாக்காளர்கள் தங்களது உரிய முகவரியில் வசிப்பதும், வாக்காளர் பட்டியிலில், இடம் பெற தகுதியுடையவர்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில், 3,387 பேர் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 515 வாக்காளர்களிடமிருந்து பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் புதிய படிவம் 6 மூலம் பெறப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெறாத தகுதியுள்ள நபர்கள், ஆண்டு முழுதும் எந்த நேரத்திலும் பெயர் சேர்ப்பதற்கான படிவம் 6பி இணைய வழியாக (https://voters.eci.gov.in/) அல்லது சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் சமர்ப்பிக்கலாம்.
உதவி தேவைப்படுவோர் 1950 உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது வாக்காளர் பதிவு அதிகாரியின் அலுவலகத்தை அணுகலாம். தகுதியுள்ள குடிமக்கள் இந்தச் சிறப்பு இயக்கத்தைப் பயன்படுத்தி, தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொண்டு, ஜனநாயகச் செயல்பாட்டில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
அமெரிக்க அமைச்சர் மும்பை வருவது ஏன்?: வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
-
சந்தை விலை நிலவரம்
-
இரவிலும் சூரிய ஒளியை வழங்கும் திட்டம்: இந்தியா - அமெரிக்கா நிறுவனங்கள் ஒப்பந்தம்
-
பெட்ரோல் ஏற்றுமதி வரி உயர்வு: 50 பைசாவிலிருந்து ரூ.2.50 ஆனது
-
நுால்கள் வெளியீட்டு விழா
-
ஏரியில் பைபர் கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிப்பு