புதிய வாக்காளர் சேர்ப்புக்கு சிறப்பு திருத்த பணி: தமிழகம் உட்பட 17 மாநிலங்களில் நடக்கிறது

4

புதுடில்லி: தமிழகம், கேரளா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீஹார், கோவா உட்பட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் விடுபட்ட மற்றும் புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான சிறப்பு திருத்தப் பணிக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி மூலம் 13 கோடி வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் கமிஷன் நீக்கிவிட்டதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

உயிரிழந்தோர், இடம்பெயர்ந்தோர், ஒன்றுக்கும் மேற்பட்ட அடையாள அட்டை வைத்திருந்தோரின் பெயர்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டதாக தேர்தல் கமிஷன் விரிவாக விளக்கம் அளித்துள்ளது.

வழக்கு





எனினும், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை பெரும் சர்ச்சையாக மாற்றி வருகின்றன. மேலும், எஸ்.ஐ.ஆர்., பணிக்கு எதிராகவும், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

இது தொடர்பாக காங்கிரசை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசு மற்றும் தேர்தல் கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் பிறப்பித்தது.

இந்நிலையில், எஸ்.ஐ.ஆர்., பணிகள் முடிந்த தமிழகம், கேரளா, புதுச்சேரி, கோவா, சத்தீஸ்கர், அசாம், குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், மணிப்பூர், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், உத்தரகண்ட், பீஹார், மேற்கு வங்கம், அந்தமான் நிக்கோபர் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள் என 17 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விடுபட்ட வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்புக்கான சிறப்பு திருத்த பணியை மேற்கொள்ள தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

திட்டம்



இந்த திருத்தப் பணிகளை 2027 ஜனவரிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி திருத்த பணி முடிந்ததும் வரைவு வாக்காளர் பட்டியலை வரும் நவ., 12ம் தேதி வெளியிட தேர்தல் கமிஷன் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இறுதி வாக்காளர் பட்டியல் 2027, ஜன., 4ல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.ஐ.ஆர்., பணியின்போது, வாக்காளர்கள் தங்களது பெற்றோரின் பெயர்களை 20 ஆண்டுகளுக்கு முந்தைய வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிட்டு சான்று அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த சிறப்பு திருத்த பணியில், விடுபட்ட மற்றும் புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான படிவம் -6 மட்டும் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

@quote@புதிய நடைமுறை!

வாக்காளர் பட்டியலில் இருந்து தவறாக பெயர் நீக்குவதை தடுப்பதற்கு புதிய வழிகாட்டுதல்களையும் தேர்தல் கமிஷன் பிறப்பித்துள்ளது. அதன் விபரம்: * ஒரு தொகுதியில் மொத்த வாக்காளர்களில் 2 சதவீதத்திற்கும் மேல் பெயர்கள் நீக்கப்பட்டால், அதை ஓட்டுப்பதிவு அதிகாரி நேரில் சென்று சரிபார்க்க வேண்டும் * ஒரு குறிப்பிட்ட நபர், 5 நபருக்கு அதிகமான பெயர்களை நீக்கக் கோரி விண்ணப்பித்தால், அதையும் நேரில் சென்று தேர்தல் அதிகாரி ஆய்வு செய்ய வேண்டும் * பெயர் நீக்கம் செய்யப்படும்போது, அதற்கான காரணங்களை அதிகாரி குறிப்பிட்டு, அதை தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் * அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஓட்டுச்சாவடி முகவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 10 படிவங்களை சமர்ப்பிக்கலாம். அதற்கு மேல் சமர்ப்பித்தால் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்வர். * ஒருவர் மொத்தமாக பலரது பெயர்களை நீக்குவதற்கு விண்ணப்பம் செய்வதை தடுக்க, தனிநபர் தாக்கல் செய்யும் படிவம் - 7ன் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.quote

Advertisement