டூவீலர்– சுற்றுலா பஸ் மோதல் கல்லுாரி மாணவர் பலி

திருவாடானை: திருவாடானை அருகே டூவீலர் மீது சுற்றுலா பஸ் மோதிய விபத்தில் கல்லுாரி மாணவர் பலியானார். மற்றொருவர் காயமடைந்தார். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே எட்டியதிடல் கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன் மகன் ஜெஸ்வின்ராஜ் 20. சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த ராஜாசிங் மகன் ராபர்ட் 20. நண்பர்களான இருவரும் திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் 2ம் ஆண்டு படித்து வந்தனர். ஆயுத பூஜையை முன்னிட்டு கல்லுாரி விடுமுறை என்பதால் இருவரும் திருச்சியிலிருந்து டூவீலரில் ஆர்.எஸ்.,மங்கலம் நோக்கி திருச்சி–ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர். டூவீலரை ஜெஸ்வின்ராஜ் ஓட்டினார். நேற்று மாலை 4:00 மணிக்கு திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலம் பகுதியில் சென்ற போது எதிரில் ராமேஸ்வரத்திலிருந்து ஆந்திரா சென்ற தனியார் சுற்றுலா பஸ் டூவீலர் மீது மோதியது. இதில் ஜெஸ்வின்ராஜ் சம்பவ இடத்தில் இறந்தார். பலத்த காயமடைந்த ராபர்ட், ராமநாதபுரம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பஸ் டிரைவர் ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தை சேர்ந்த சோமசேகரை 37, திருவாடானை போலீசார் கைது செய்தனர்.

Advertisement