தேடப்படும் நபரின் வீட்டில் போலீசார் கண்காணிப்பு

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத்தருவதாக, 100 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில் தேடப்படும் நபரின் வீடுகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

தி.மு.க.,வைச் சேர்ந்த அரசகுமார், 58 என்பவர், தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்று தருவதாக, 100 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தற்போது, ஜாமினில் வெளியே வந்துள்ளார். இவரது கூட்டாளியான, முன்னாள் எம்.எல்.ஏ., முத்துகுமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

அதேபோல, இந்த மோசடி தொடர்பாக, தொழில் வர்த்தகர் சண்முகபிரியா என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர். நீதிமன்றத்தில் அனுமதி பெற்று அவரின் வீடுகளில் சோதனை நடத்த உள்ளனர்.

இதற்கிடையே, வீட்டில் உள்ள, குற்ற ஆவணங்களை எடுத்துச் சென்று விடக்கூடாது என்பதற்காக, சென்னை பெருங்குடி, நீலாங்கரையில் உள்ள சண்முக பிரியா தொடர்புடைய வீடுகள் உட்பட நான்கு இடங்களை, போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதற்காக, போலீசாரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Advertisement