சிறுவனை பைக் ஓட்ட அனுமதித்த உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

விருத்தாசலம்: சிறுவனை பைக் ஓட்ட அனுமதித்த பைக் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து விருத்தாசலம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடலுார் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் கடந்த 5ம் தேதி கருவேப்பிலங்குறிச்சி கூட்ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, விருத்தாசலம் நோக்கி வந்த டிஎன்–61–ஏசி–2507 பதிவெண் கொண்ட பைக் நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், பைக்கை ஓட்டி வந்தது 17 வயது சிறுவன் என்பதும், லைசன்ஸ் இல்லாத அவர், அரியலுார் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த ஸ்ரீராமன் கிராமத்தை சேர்ந்த உறவினரின் பைக்கை ஓட்டி வந்தது தெரிய வந்தது.

தொடர் விசாரணைியல், பைக், ஆண்டிமடம் அடுத்த ஸ்ரீராமன் கிராமத்தை சேர்ந்த நடராஜன் மகள் அபிநயா பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, உரிய ஆவணம் மற்றும் லைசென்ஸ் இல்லாமல் 17 வயது சிறுவனுக்கு பைக் ஓட்ட அனுமதித்த குற்றத்திற்காக, மோட்டார் வாகன சட்டம் பிரிவு 199ஏ வின் கீழ், பைக் உரிமையாளர் மீது விருத்தாசலம் நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், பைக் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

சிறுவர்களை பைக் ஓட்ட அனுமதி அளிக்கும் பெற்றோர் அல்லது வாகன உரிமையாளர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் எச்சரித்துள்ளார்.

Advertisement