மகள் இறந்த அதிர்ச்சியில் தாய் மயங்கி விழுந்து சாவு: திருபுவனை அருகே சோகம்

திருபுவனை: திருபுவனை அருகே மகள் இறந்த துக்கம் தாளாமல் அதிர்ச்சியில் தாயும் மயங்கி விழுந்து இறந்தார்.

புதுச்சேரி, திருபுவனை அடுத்த திருவாண்டார்கோவில், பெரியபேட் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் மனைவி செங்கோதையம்மாள், 45. இவர்களுக்கு பிரித்திகா 21; பிரசன்னா 19; ஆகிய இரண்டு பட்டப்படிப்பு முடித்த மகள்கள் உள்ளனர். கடந்த 15ஆண்டுகளுக்கு முன் பெருமாள் இறந்துவிட்டார். இந்நிலையில் தனது தாய் மச்சகாந்தி ஆதரவில் செங்கோதையம்மாள் தனது இரண்டு மகள்களையும் படிக்க வைத்தார்.

இரண்டு மகளும் பட்டப்படிப்பு முடித்துள்ளனர். இந்நிலையில் உடல் நிலை சரியில்லாத நிலையில் செங்கோதையம்மாள் நேற்று காலை 8:30 மணிக்கு திடீரென மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, அரியூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி காலை 11:00 மணிக்கு செங்கோதையம்மாள் இறந்தார். அவரது உடல் மாலை 2:30 மணிக்கு திருவாண்டார்கோவிலில் உள்ள வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. தனது மகள் இறந்ததையும், பேத்திகள் இருவரும் தாய், தந்தை இன்றி ஆனாதையாக நிற்பதை எண்ணி கதறி அழுத செங்கோதையின் தாய் மச்சகாந்தி, 84; நேற்று மாலை 3:00 மணிக்கு அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார்.

இறந்த செங்கோதையின் மூத்த மகள் பிரித்திக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது.

இந்நிலையில் தங்களை வளர்த்து ஆளாக்கிய தாய் மற்றும் பாட்டியை இழந்து இருவரும் அனாதையாக நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement