புதுச்சேரி கூட்டுறவு வங்கி பரிவர்த்தனை முடக்கம் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அதிரடி உத்தரவு
புதுச்சேரி: புதுச்சேரி நேரு வீதியில் இயங்கி வரும் கூட்டுறவு நகர வங்கியில் ஆய்வு மேற்கொண்ட ரிசர்வ் வங்கி அதிகாரிகள், அந்த வங்கியின் அனைத்து விதமான பரிவர்த்தனைகளை உடனடியாக முடக்கியுள்ளனர்.
புதுச்சேரி நேரு வீதியில் கூட்டுறவு நகர வங்கி செயல்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள் தங்களின் சம்பள அடிப்படையிலேயே இங்கு எளிதாகக் கடன் பெற்று, திருப்பி செலுத்தி வந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை 3:00 மணியளவில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் குழு, அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, வங்கியின் வரவு-செலவு உள்ளிட்ட ஒட்டுமொத்த நிதி நிலவரத்தை அலசி ஆராய்ந்தனர். அதில், வங்கியின் தற்போதைய நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதை உறுதி செய்தனர்.
இதனையடுத்து, எந்தவிதமான புதிய ஆவணப் பரிமாற்றங்களும் செய்ய முடியாதவாறு வங்கியை முழுமையாக முடக்கி சீல் வைத்தனர்.
இதுமட்டுமின்றி, வங்கி நிர்வாகத்தின் முறைகேடுகள் அல்லது நிதி வீணடிப்பு குறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்து சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரிசர்வ் வங்கியின் இந்த திடீர் நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களும், கணக்குதாரர்களும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி சில குறிப்பிட்ட தளர்வுகளையும், கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
இதன்படி, வங்கியின் நகைக் கடன் திட்டத்தின் கீழ் கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்கள், தங்களின் நிலுவைத் தொகையை செலுத்தி உடனடியாகத் தங்களது நகைகளை மீட்டுக்கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு மற்றும் நிலையான வைப்பு நிதி போன்ற கணக்குகளை வைத்துள்ள பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் யாரும் தங்களது கணக்கிலிருந்து எந்தவிதமான பணத்தையும் பெற முடியாதவாறு கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் தங்களது சொந்தப் பணத்தை எடுக்க முடியாமல் பரிதவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
6 மாத கால முடக்கம்
வங்கியின் ஒட்டுமொத்த நிர்வாகம் மற்றும் பணப்பரிவர்த்தனைகள் அடுத்த ஆறு மாத காலத்திற்கு முழுமையாக முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த முடக்கப்பட்ட காலகட்டத்தில் வாடிக்கையாளர்கள் படும் துயரைக் குறைக்கும் வகையில், கணக்கு வைத்துள்ள ஒவ்வொருவரும் அவசரத் தேவைகளுக்காக அதிகபட்சமாக 5,000 ரூபாய் வரை மட்டுமே பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த அவசரகாலத் தொகை பலருக்குத் தற்காலிக ஆசுவாசமாக இருந்தாலும், ஒட்டுமொத்தப் பணமும் முடங்கியிருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
@block_B@
இந்த வங்கி திடீரென நிதி நெருக்கடியில் சிக்கித் தள்ளாடுவதற்கான காரணங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வங்கியில் வழங்கப்பட்ட கடன் செலவினங்களில் 99 சதவீதத்திற்கும் அதிகமானவை அரசு ஊழியர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. கூட்டுறவு மற்றும் கார்ப்பரேஷன் போன்ற பல்வேறு அமைப்புகளின் கீழ் பணியாற்றிய அரசு ஊழியர்களின் சம்பள அடிப்படையிலேயே கடன்கள் அனுமதிக்கப்பட்டு வந்தன. ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து நேரடியாகக் கடனுக்கான தொகை பிடிக்கப்பட்டு வங்கிக்குச் செலுத்தப்பட்டு வந்தது.
ஆரம்ப காலத்தில் இந்த அமைப்பு மிகவும் நேர்த்தியாகவும், சிக்கல் இன்றியும் செயல்பட்டு வந்தது. இதனால் வங்கியின் லாபமும் சீராக இருந்தது. ஆனால், காலப்போக்கில் நிலைமை மாறியது. பல்வேறு காரணங்களால் வழங்கப்பட்ட கடன் தொகைகள் முறையாக வசூலிக்கப்படாமல் நிலுவையில் நின்றன. வசூல் வேட்டை மந்தமானதாலும், வாராக்கடன் அதிகரித்ததாலும் வங்கியின் நிதி ஆதாரம் முற்றிலுமாகச் சுருங்கியது. இதன் விளைவாக, தற்போது இந்த வங்கி 25 கோடி ரூபாய் அளவிற்குப் பெரும் நஷ்டத்தில் சிக்கித் தத்தளிப்பது குறிப்பிடத்தக்கது. அரசு ஊழியர்களை நம்பியிருந்த ஒரு பிரதான கூட்டுறவு வங்கி இப்படி முடங்கியுள்ள சம்பவம் புதுச்சேரியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.block_B