மின்தேவையை சமாளிக்க 7 மாதங்களுக்கு 1,000 மெகாவாட் மின்சாரம்: டெண்டர் கோரியது மின்வாரியம்

1

சென்னை; தமிழகத்தில் இரவில் ஏற்படும் உச்ச நேர மின் தேவையை சமாளிக்க, நவ., 1 முதல், 2027 மே 31 வரை, மாலை 6:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை, 1,000 மெகா வாட் மின்சாரம் வாங்க, மின் வாரியம், 'டெண்டர்' கோரியுள்ளது.

தமிழக மின் தேவை தினமும் சராசரியாக, 16,000 மெகாவாட்டாக உள்ளது. இது, கோடை காலத்தில், 20,000 மெகாவாட்டை தாண்டும். கோடை காலம் முடிவடைந்தும் வெயில் கடுமையாக உள்ளதால், மின் தேவை குறையவில்லை.

பகலில் சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து தினமும் சராசரியாக, 6,500 மெகாவாட் கிடைப்பதால், மின் தேவையை பூர்த்தி செய்வதில், மின் வாரியத்திற்கு சிரமம் இல்லை. மாலை முதல் சூரியசக்தி மின்சாரம் கிடைக்காத நிலையில், மே மாதம் தொடங்கிய காற்றாலை சீசன், சமீபத்தில் முடிவடைந்தது.

தினமும், 4,000 மெகா வாட் மின்சாரம் கிடைத்த நிலையில், கடந்த வாரத்தில் இருந்து, 1,000 மெகா வாட் கூட கிடைப்பதில்லை. மின் தேவையை பூர்த்தி செய்ய நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், கூடுதலாக மின்சாரம் வாங்கும் நடவடிக்கையில், மின் வாரியம் ஈடுபட்டுள்ளது.

கடந்த, 15ம் தேதி முதல் இம்மாதம், 31ம் தேதி வரை தினமும், 1,500 மெகாவாட் வாங்க, சில நிறுவனங்களிடம் சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஒரு யூனிட் மின்சார விலை, 35 ரூபாய். பல மாவட்டங்களில் சில நாட்களாக மழை பெய்வதால், மின் தேவையும், கொள்முதலும் குறைந்துள்ளது.

இந்நிலையில், வரும் நவ., 1 முதல், 2027 மே 31 வரை, ஏழு மாதங்களுக்கு தினமும் மாலை, 6:00 மணி முதல் நள்ளிரவு, 12:00 மணி வரை, 1,000 மெகா வாட் மின்சாரம் வாங்க, மின் வாரியம் டெண்டர் கோரியுள்ளது.

Advertisement