மழை நீர் தேங்கிய பகுதிகள் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
மதுரை: மதுரை மாநகராட்சியில் மழை நீர் தேங்கிய பகுதிகளில் மேற்கொண்ட சீரமைப்பு பணிகளை கமிஷனர் கவுரவ் குமார் ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில் நகரில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்குவதாக புகார்கள் எழுகின்றன. நேற்று மண்டலம் 2 மற்றும் 4 பகுதிகளில் பாதித்த பகுதிகளை கமிஷனர் ஆய்வு செய்தார்.
நரிமேடு பிரசாத் ரோடு, செல்லுார் 60 அடி ரோடு, தென்றல் நகர், எப்.எப், ரோடு, அஹிம்சாபுரம் 6வது தெரு, பந்தல்குடி கால்வாய் பகுதிகளில் பார்வையிட்ட கமிஷனர், தேங்கிய மழை நீரை வெளியேற்ற உத்தரவிட்டார். பாதாளச் சாக்கடையில் தேங்கிய நீரை கழிவு நீர் உறிஞ்சும் வாகனம் மூலம் வெளியேற்றவும் உத்தரவிட்டார். ரோட்டின் பள்ளங்களை 'பேட்ச்' செய்து மூட உத்தரவிட்டார்.
தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையில் முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தேங்கும் நிலை ஏற்பட்டால் உடனே அகற்றி, போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கவும் பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து சர்வேயர் காலனி 120 அடி ரோடு பகுதியில் பாதாள சாக்கடையை சரி செய்யும் பணிகளை ஆய்வு செய்தார். உதவி செயற் பொறியாளர்கள் காமராஜ், சேவியர், உதவிப் பொறியாளர்கள் மாரியப்பன், இளங்கோ, எஸ்.ஓ., ராஜ்கண்ணன் உடன் சென்றனர்.