பேரிடர் மேலாண்மை பணியில் தனியார் வல்லுனர்கள் சேர்ப்பு வருவாய் துறை நடவடிக்கை
சென்னை: தமிழகத்தில், பேரிடர் மேலாண்மை துறையின் கட்டுப்பாட்டு மையங்களில், தனியார் வல்லுனர்களை பணியமர்த்த, அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில், மாநில அளவில் பேரிடர் மேலாண்மை ஆணையம் செயல்படுகிறது. பேரிடர் குறித்த தொடர் கண்காணிப்பு பணிகளுக்காக, சென்னை எழிலகம் வளாகத்தில், அவசரகால செயல்பாட்டு மையம் உள்ளது.
இதேபோன்று, மாவட்ட அளவிலும் பேரிடர் மேலாண்மை அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக, கலெக்டர் அலுவலகங்களில் பேரிடர் அவசர கால செயல்பாட்டு மையங்கள் உள்ளன.
இதில், வானிலை, வருவாய், பொதுப்பணி, நீர்வளம், உள்ளாட்சி உள்ளிட்டு துறைகளின் அதிகாரிகள், அலுவலர்கள் பணியில் உள்ளனர். இந்நிலையில், தனியார் வல்லுனர்களையும் அப்பணியில் ஈடுபடுத்த, அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில், 38 மாவட்டங்களில் செயல்படும் பேரிடர் மேலாண்மை மையங்கள், சென்னையில் உள்ள அவசர கால செயல்பாட்டு மையம் ஆகியவற்றில், அரசு அதிகாரிகளுடன், தனியார் வல்லுனர்களையும் ஈடுபடுத்த உள்ளோம்.
குறிப்பாக, வானிலை, நகர்ப்புற வெள்ள மேலாண்மை உள்ளிட்ட பிரிவுகளில் தொழில்முறை வல்லுனர்களாக உள்ள நபர்களை பணியில் ஈடுபடுத்த, அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக, நடப்பு நிதி ஆண்டில், 8.50 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.