ஈரோடு மாவட்டத்தில் 5 மாதங்களில் கண்டறியப்பட்ட 1,337 காசநோயாளி

ஈரோடு: தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், ஈரோடு மாவட்டத்தில் கடந்த, 5 மாதங்களில், 1,337 காசநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மூலம், வட்டாரம் வாரியாக ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், காசநோய் மையங்களில் காசநோய் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்நோய் கண்டறியப்படுவோருக்கு, அவர்களது நோயின் தன்மைக்கு ஏற்ப, மூன்று முதல் கூடுதல் நாட்களுக்கு மாத்திரை இலவசமாக வழங்கப்படுகிறது.

அவர்கள் ஆரோக்கியமான உணவு உட்கொள்ளும் வகையில், மத்திய அரசு, 6,000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்துகிறது. அத்துடன், அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் வகையில், அவர்களது குடும்பத்தில் அல்லது அவர்களுடன் உள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு உறுதி செய்யப்படுகிறது.

இதுபற்றி, காசநோய் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஏப்., முதல் ஆக., மாதம் வரை, 47,953 நபர்களுக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 1,337 பேருக்கு காசநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு, சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். அதில், 1,205 பேர் பதிவு செய்து சிகிச்சை பெற்றனர். அதில், 1,185 பேர் குணமடைந்தனர்.

ஒருவர் இடையில் சிகிச்சையை நிறுத்தி கொண்டார். 25 பேர் இறந்துள்ளனர். திங்களூர் வட்டாரத்தில் அதிகபட்சமாக, 486 பேர், மாவட்ட காசநோய் மையத்தில், 377 பேர், சிறுவலுார் வட்டாரத்தில், 114 பேர், உக்கரம் பகுதியில், 96 பேர் பாதிக்கப்பட்டனர்.

இவ்வாறு கூறினர்.

Advertisement