ஆத்துார் – காரைக்கால் மார்க்கத்தில் புதிய அகல ரயில் பாதை எம்.பி.,க்கள் குரல் கொடுக்காததால் கிடப்பில் போன திட்டம்

– நமது நிருபர் –: ஆத்துார் –- பெரம்பலுார், அரியலுார், காரைக்கால் மார்க்கத்தில், புதிய அகல ரயில் பாதை அமைக்க, தமிழக எம்.பி.,க்கள் குரல் கொடுக்காததால், இத்திட்டம் மீண்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தென்பகுதியான, நாகை, திருவாரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதியில் உருக்கு ஆலைகள், ‘டைல்ஸ்’ தொழிற்சாலைகளும் அதிகளவில் உள்ளன.

இங்குள்ள தொழிற்சாலைகளுக்கு, நிலக்கரி தேவைப்படுவதால், இவை, துறைமுகத்தில் இருந்து, தரைவழியாக கொண்டு செல்லும்போது, போக்குவரத்து செலவு அதிகமாகிறது. இதற்காக, காரைக்கால் –- நாகூர் ரயில் பாதை திட்டம், 90 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு, காரைக்கால் துறைமுகத்தில் இருந்து, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, சென்னை வரை, சரக்கு போக்குவரத்து நடந்து வருவதால், தினமும் ரயில்வே துறைக்கு, பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது.

கடந்த, 2010ல், காரைக்கால் துறைமுகத்தை மையமாக கொண்டு மேலும், மூன்று புதிய ரயில் பாதைகள் அமைக்க, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

அதன்படி, காரைக்கால், திருநள்ளார், பேரளம், மயிலாடுதுறை வழியாக, கங்கைகொண்ட சோழபுரம், ஜெயங்கொண்டம், அரியலுார், பெரம்பலுார், ஆத்துார், சேலம் வரை, 260 கி.மீ., துாரம் புதிய அகல ரயில் பாதை அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

இதில், சேலம் ஆத்துார் வரை, 60 கி.மீ., துாரம், அகல ரயில் பாதை மற்றும் பேரளம் - மயிலாடுதுறை வரை, 20 கி.மீ., அகல ரயில் பாதை உள்ளது. மீதமுள்ள, 180 கி.மீ., துாரம் மட்டும் புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும்.

இத்திட்டத்திற்காக, 1,080 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. ஆத்துார் –- பெரம்பலுார் வரை, கடந்த, 1932ல் ஆங்கிலேயர் காலத்தில் ரயில் பாதை அமைப்பதற்காக, நிலம் கையகப்படுத்தியுள்ளதால், ஆத்துார் -– பெரம்பலுார் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகளில் எவ்வித இடர்பாடுகளும் இருக்காது.

இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்றினால், சரக்கு ரயில் செல்லும் முக்கிய வழித்தடமாக அமையும். இத்திட்டத்தை செயல்படுத்தும்படி, 2014 – -15ல், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார். அதன்பின், இத்திட்டம் பரிசீலனை செய்யப்பட்டது.

கடந்த, 2024ல், சேலம் கோட்ட உதவி பொறியாளர் மாணிக்கவாசகம், ‘ஆத்துார் – பெரம்பலுார், அரியலுார் அகல ரயில் பாதை திட்டப்பணி குறித்து, மத்திய ரயில்வே துறை பரிசீலனை செய்து வருகிறது’ என்றார். ஆனால், தமிழக, எம்.பி.,க்கள் இத்திட்டத்திற்காக, பார்லி.,யில் குரல் கொடுக்காததால், மீண்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஐக்கிய விவசாயிகள் சங்க தலைவர் சங்கரய்யா கூறியதாவது:

சேலம், ஆத்துார் –- பெரம்பலுார், காரைக்கால் புதிய அகல ரயில்பாதை அமைத்தால், மத்திய தமிழக பகுதி மிகுந்த பயன்பெறும். இந்த மார்க்கத்தில் உள்ள, ஒன்பது தொழிற்சாலைகளில் மாதத்திற்கு, 30 லட்சம் டன்னுக்கு மேல் சிமென்ட் உற்பத்தி செய்யப்படுகிறது.

இவை, அனைத்தையும் ரயில் மூலம் கொண்டு செல்வதால், ரயில்வே துறைக்கு வருவாய் ஏற்படும். சேலத்தில் உள்ள உருக்கு ஆலை, மாம்பழக்கூழ் உற்பத்தி தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருட்களும், ரயில் மூலம் காரைக்கால் துறைமுகம் வழியாக, தேவையான இடங்களுக்கு கொண்டு செல்லமுடியும்.

பெரம்பலுாரில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலை, கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள், ரயில் போக்குவரத்து மூலம், காரைக்கால் துறைமுகத்தை பயன்படுத்துவர்.

ஜெயங்கொண்டம் பகுதியில் நிலக்கரி படிமங்கள் உள்ளதால், 15 ஆயிரம் ஏக்கர் நிலம், என்.எல்.சி., நிர்வாகம் கையகப்படுத்தியுள்ளது. இங்கு, பெரிய அளவில் நிலக்கரி சுரங்கம் அமையும். வெட்டி எடுக்கும் நிலக்கரி, சேலம் –- காரைக்கால் அகல ரயில் பாதை வழியாக கொண்டு செல்லலாம்.

பயனுள்ள இத்திட்டத்துக்கு, ரயில்வே பட்ஜெட்டில், நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. அதேபோல், சின்னசேலம் –- கள்ளக்குறிச்சி புதிய ரயில் பாதையுடன், திருக்கோவிலுார் பாதையும் அமைக்க வேண்டும். தமிழக எம்.பி.,க்கள், மத்திய அரசிடம் ரயில்வே திட்டம் குறித்து வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement