2 மாத அரிசிக்கான பணம் வங்கி கணக்கில் வரவு
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ரேஷன் கார்டுகளுக்கு 2 மாத அரிசிக்கான பணம் ரூ.35 கோடி வங்கி கணக்கில் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மொத்தம் 2.54 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. அதில், மாநில அரசு சார்பில் சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு மாதம் 20 கிலோவும், மஞ்சள் ரேஷன் கார்டுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 6 மாதங்களாக அரிசி வழங்கப்படவில்லை. கடந்த சட்டசபை கூட்டத்தில், நிலுவையில் உள்ள 6 மாத அரிசிக்கான பணம் குடும்ப தலைவி வங்கி கணக்கில் செலுத்தப்படும் என, முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அதில் முதற்கட்டமாக 2 மாதத்திற்கான அரிசி பணம் முதலில் வரவு வைக்கப்படும். மீதமுள்ள 4 மாதத்திற்கான பணம் அடுத்தடுத்த மாதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 779 ரேஷன் கார்டுகளில், சிவப்பு ரேஷன் கார்டுக்கு தலா ரூ. 860 வீதம் இரண்டு மாதத்திற்கான பணம் ரூ. 1720, மஞ்சள் ரேஷன் கார்டுக்கு தலா ரூ. 430 வீதம் 2 மாதத்திற்கான பணம் ரூ. 860 அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக அரசு ரூ. 35 கோடியே 71 லட்சத்து 37 ஆயிரத்து 790 செலவிட்டுள்ளது.
குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மீதமுள்ள 4 மாத்திற்கான இலவச அரிசிக்கான பணம், தீபாவளியை முன்னிட்டு இம்மாதம் இறுதிக்குள் வங்கி மூலம் செலுத்த ஏற்பாடு நடந்து வருகிறது. ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட சேவைகள் விரைவில் துவங்கப்படும். அதேபோல், ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் இலவச அரிசி கொள்முதல் செய்ய டெண்டர் விடும் நடைமுறைகளும் நடந்து வருகிறது. விரைவில் அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.