பாரம்பரிய சின்னங்கள் மாணவர்கள் சுற்றுலா

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் சோழர் கால கட்டட கலையின் சிறப்பம்சங்களாக விளங்கும் பல்வேறு தளங்களை கல்லுாரி மாணவர்கள் பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் கல்லுாரி மாணவர்கள்ஒரு நாள் சுற்றுலா சென்றனர். கடலுார் டவுன்ஹால் அருகில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, பயணத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து, மஞ்சக்குப்பம் மணிகூண்டு பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடப்பதை ஆய்வு செய்தார். பின், அவர் கூறியதாவது: கடலுார் மாவட்டத்தில் உள்ள வரலாற்று நினைவுச் சின்னங்களை பாதுகாத்தல், பராமரித்தல், அவற்றின் அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்துதல், பாரம்பரிய கட்டடங்களை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாரம்பரிய சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, கடலுார் அரசு பெரியார் கல்லுாரி மாணவ, மாணவிகள் 50 பேருக்கு பஸ் ஏற்பாடு செய்து ஸ்ரீமுஷ்ணம் நிதிஸ்வரசுவாமி கோவில், கீழக்கடம்பூர் ருத்ரபதி கோவில், எரும்பூர் கடம்பவனேஸ்வரர் கோயில் ஆகிய வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக பழமையான கோவில்களின் வரலாறு, கட்டடக் கலை நுட்பங்கள், சிற்பக் கலைகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும். மாவட்ட சுற்றுலா அலுவலர் கண்ணன், தொல்லியல் துறை அலுவலர் சுரேஷ் உடனிருந்தனர்.

Advertisement