வங்கி ரகசிய எண்களை யாருக்கும் பகிர வேண்டாம்: பொதுமக்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் ‘அட்வைஸ்’

புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்துக் குடிமக்களுக்கும் நிதிச் சேவைகளை முழுமையாகக் கொண்டு சேர்க்கும் வகையில், இந்தியன் வங்கியின் மாநில நிலை வங்கிகள் குழு மற்றும் அரசு சார்பில், ‘அனைத்துத் தரப்பினருக்கும் நிதிச் சேவை இயக்கம்’ துவக்க விழா நடந்தது.

வில்லியனுாரில் நடந்த விழாவை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார். ரவிக்குமார் எம்.எல்.ஏ., சப் கலெக்டர் குமரன், மண்டல மேலாளர் வெங்கடசுப்பிரமணியன், இந்தியன் வங்கி முன்னோடி மாவட்ட மேலாளர் சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

விழாவில், அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், ‘நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புப் பணியில் வங்கிகள் மிக முக்கிய பங்காற்றி வருகிறது.

நாட்டில் வங்கி கணக்கே இல்லாத நிலையை மாறி, ஏழை எளிய மக்களும் வங்கி சேவையைப் பெறும் வகையில் ஜீரோ பேலன்ஸ் 'ஜன் தன் கணக்குகள்' மத்திய அரசால் தொடங்கப்பட்டு, அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் மானியங்கள் மக்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகின்றன.

எளிய முறையில் எந்த ஜாமினும் இல்லாமல் சிறுதொழில் செய்பவர்கள் பயன்பெறும் வகையில் முத்ரா கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆன்லைன் மோசடிகளைத் தவிர்க்க வங்கிகள் ஓடிபி முறையைக் கொண்டு வந்துள்ளன. பொதுமக்கள் தங்களது வங்கி கணக்குகளையும், ரகசிய எண்களையும் யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

வங்கிகளில் டிபாசிட் தொகைகள் மற்றும் கணக்குகளுக்கு முறையான வாரிசுதாரர்களை (நாமினி) முன்கூட்டியே நியமிப்பது எதிர்காலச் சிக்கல்களைத் தவிர்க்கும். ஆதார் எண்ணை வங்கி கணக்குகளுடன் இணைப்பதன் அவசியம். ஆண்டுக்கு ரூ.436 என்ற குறைந்த பிரீமியத்தில் வழங்கப்படும் காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை பொதுமக்கள் முறையாகப் பயன்படுத்தி தங்களின் பொருளாதார வாழ்வை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் கொண்டுவரும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும், வங்கிகளின் சேவைகளையும் பொதுமக்கள் நேர்மையான முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்’ என்றார்.

Advertisement